தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.

Advertisment

இது தவிர மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக மற்றும் பா.ம.க, கூட்டணியில் இருந்து விலகி வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை இன்று (07-01-26) பா.ம.க தலைவர் அன்புமணி சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகன் உடனிருந்தார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அன்புமணி சந்தித்து பேசினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் மூலம் அதிமுக - பா.ம.க கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பா.ம.கவுக்கு அதிமுக 15 தொகுதிகள் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், 20க்கும் மேற்பட்ட இடங்களை வழங்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

Advertisment