தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் எனத் தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை மறுநாள் (23.01.2025) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டத் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளைக் கூட்டணி தலைமை அறிமுகப்படுத்த உள்ளது.
இதனையொட்டி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயல் தமிழகம் வந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், பியூஸ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள காட்டங்கொளத்தூரில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தருடன், பியூஸ் கோயல் சந்தித்துப் பேசினார். அதோடு அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவையும் சந்தித்துப் பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பியூஷ் கோயலுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மத்திய அமைச்சர், என்னுடைய இனிய நண்பர் பியூஷ் கோயல், தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜகவின் ஒருங்கிணைப்பாளரான அவரை இன்று சந்தித்தேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/21/piyush-goyal-anbumani-nainar-team-2026-01-21-23-49-56.jpg)
வருகின்ற தேர்தலில் எங்கள் கூட்டனியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை நோக்கி நாங்கள் செல்வதற்காக இந்த சந்திப்பு நடந்தது வருகின்ற 23ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி தமிழ்நாடுக்கு வருகை தர இருக்கின்றார். அதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்கள் திமுக அரசு மீது மிகுந்த கோபத்தில் இருக்கின்றார்கள். அன்றாடம் தமிழ்நாட்டிலே பல தரப்பு மக்கள் போராடி வருகிறார்கள். குறிப்பாக ஆசிரியர்கள் ஒரு பக்கம், இணை பேராசிரியர்கள் ஒரு பக்கம் இடைநிலை ஆசிரியர்கள் 25 நாட்களாக போராடி வருகிறார்கள்.
சத்துணவு ஊழியர்கள் போராட்டம் செய்கிறார்கள். துப்புரவு பணியாளர்கள் போராட்டம் செய்து கொண்டிருக்கின்றார்கள். செவிலியர்கள், மருத்துவர்கள் கறிக்கோழி விவசாயிகள், விவசாயிகள் பெண்கள், மாணவர்கள் போன்ற பல தரப்பு மக்கள் இந்த ஊழல் மிகுந்த மோசாமான திமுக ஆட்சியை எதிர்த்து அன்றாடம் ஆங்காங்கே போராட்டம் செய்து வருகிறார்கள். திமுக மீது அனைத்து தரப்பு மக்கள் குறிப்பாக பெண்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களும் இன்று மிகுந்த கோபத்தில் ஆத்திரத்தில் இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம் நிலவி வருகிறது” எனத் தெரிவித்தார்.
மற்றொறுபுறம் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கட்சியில் அதிகாரத்தை யார் கட்டுப்படுத்துவது, பாமகவின் தலைவர் யார் என்கிற மோதலானது வெளிப்படையாக இருந்து வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி கடந்த 7ஆம் தேதி (07.01.2026) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக - அதிமுக - பாமக இடையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow Us