Advertisment

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அன்புமணி கடிதம்; திமுக மட்டும் மிஸ்ஸிங்!

anbumani-mic-1

சாதிவாரி சர்வே கோரி 17ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எனவே சமூகநீதியை பாதுகாக்கும் வகையில் திமுக தவிர்த்து மீதமுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்து வரும் தங்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவையை தாங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மனிதர்களின் உடல்நலக் குறைவை சரி செய்ய வேண்டும் என்றால், அதற்கான முதல் நடவடிக்கை நோய்க்கான காரணத்தைக் கண்டறிவதே. அதேபோல். சமூகத்தின் நிலையை கண்டறிவதற்கான எக்ஸ்ரே கருவி தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.

Advertisment

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து 1994ஆம் ஆண்டில் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் 13.07.2010ஆம் தீர்ப்பளித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு,‘‘69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டது. ஆனால், அப்போதிருந்த தமிழக அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் 2012ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். 

Advertisment

அந்த வழக்கு எந்த நேரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடும். அப்போது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீடுப் பிரிவினரின் மக்கள்தொகை 69%க்கும் கூடுதலாக இருப்பதை நிரூபிக்காவிட்டால், 69% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் வாய்ப்புள்ளது. எனவே, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 69% இட இதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26.50%, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.5%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, பட்டியலினத்தவருக்கு 15%, பட்டியலினம் அருந்ததியருக்கு 3%, பழங்குடியினருக்கு 1% வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சமூகங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில் 7 சமூகங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் 115 சமூகங்களும், அருந்ததியர்களையும் உள்ளடக்கிய பட்டியலினத்தில் 76 சமூகங்களும், பழங்குடியினத்தில் 36 சமூகங்களும் உள்ளன.

anbumani-mic

ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும்  இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு காரணம், சமமற்றவர்கள் சமமானவர்களாக ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது தான். இந்த நிலையை மாற்றி, அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுமையாக கிடைக்க ஒரே தீர்வு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தான். அதற்கு அடிப்படைத் தேவை சாதிவாரி சர்வே நடத்துவது தான். சாதிவாரி சர்வே நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. சாதிவாரி சென்சஸ் மட்டும் தான் மத்திய அரசால் நடத்த முடியும். சாதிவாரி சர்வேயை அனைத்து மாநிலங்களும் நடத்த முடியும். 2008ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் மூலம் சாதிவாரி மக்கள்தொகை சர்வேயை மாநில அரசுகளே நடத்த முடியும். ஆனால், தமிழக அரசோ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை; அந்த அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என மீண்டும், மீண்டும் பொய் கூறி வருகிறது. சமூகநீதியில் திமுக அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது.

2008ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி (Collection of Statistics Act 2008) சாதிவாரி சர்வே நடத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்பதால் தான், அதை பயன்படுத்தி பிகார், தெலுங்கானா, கர்நாடகம், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி சர்வே நடத்தியுள்ளன. சாதிவாரி சர்வே நடத்தும் உரிமை மாநில அரசுக்கு உண்டு என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் ஆணையிட்டுள்ளது. அதேபோல், பிகார் மாநிலமும் இதேபோன்ற தீர்ப்பை கடந்த 2023ஆம் ஆண்டில் வழங்கியுள்ளது. பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை சர்வே நடத்தப்பட்டதையும், அதனடிப்படையில் நடத்தப்பட்ட நிகர்நோக்கு நடவடிக்கைகளையும்  எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுகளுக்கு சாதிவாரி சர்வே நடத்த அதிகாரம் உண்டு என்ற பிகார் மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று மறுத்து விட்டது.

judgement

சாதிவாரி சர்வே நடத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருப்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ததைத்  தொடர்ந்து தான் பிகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி சர்வேயில் கிடைத்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிப்பு, வீட்டுவசதி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் அரசுகள் அம்மாநிலங்களில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து உள் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளன. இந்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவையாகும். தமிழ்நாட்டிலும் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதற்கு சாதிவாரி சர்வே கட்டாயத் தேவை ஆகும். அதை நடத்துவதற்கு சட்டப்படியான எந்தத் தடையும் தமிழக அரசுக்கு இல்லை. சாதிவாரி சர்வேயை நடத்துவதற்குத் தேவையான நிதியும், மனிதவளமும் தமிழக அரசிடம் தாராளமாக உள்ளது. தமிழக அரசு நினைத்தால் ஒரு மாதத்தில் சாதிவாரி சர்வே நடத்த முடியும்.

உண்மையில், இந்தியாவின் முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் தான் நடத்தப் பட்டிருக்க வேண்டும். 1989&ஆம் ஆண்டில் தொடங்கி, 2021&ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு 3 வாய்ப்புகள் ஏற்பட்டன. அந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால், அந்த 3 வாய்ப்புகளையும் சிதைத்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கவிடாமல் செய்தது திமுக அரசு. 36 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகநீதிக்கு எதிராக திமுக எவ்வாறு சதி செய்து வருகிறது என்பதற்கு இவற்றை விட மோசமான சான்று இருக்க முடியாது.

tn-sec

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அரசால் பயன்படுத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் அனைத்தும் 95 ஆண்டுகளுக்கு முன் 1931ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் வாயிலாகத் திரட்டப்பட்டவையாகும். காலம் கடந்த புள்ளிவிவரங்களை  ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் பல தீர்ப்புகளில் தெரிவித்து விட்டன. அதன் பிறகும் நிகழ்கால, பொருத்தமான சாதிவாரி மக்கள்தொகை விவரங்களைத் திரட்ட சாதிவாரி சர்வே நடத்த திமுக அரசு மறுப்பது சமூகநீதிக்கு இழைக்கப்படும் அநீதியும், துரோகமும் ஆகும். சமூகநீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு தான். விடுதலை அடைவதற்கு முன்பே தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையில் 100% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்தது. அதற்கு காரணம் அப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் அரசிடம் தயாராக இருந்தது தான்.

அந்த நிலை மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு தமிழக அரசே தடையாக இருக்கக் கூடாது. எனவே தான், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மறுத்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், உடனடியாக சாதிவாரி சர்வே நடத்த வலியுறுத்தியும் சென்னையில் திசம்பர் 17&ஆம் நாள் எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை சமூக, கல்வி, பொருளாதார நிலையில் மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். எனவே, இந்தப் போராட்டத்தில் சமூகநீதியில் அக்கறை கொண்ட தாங்களும் பங்கேற்று தமிழகத்தில் சமூகநீதியை பாதுகாக்க ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

all parties anbumani letter pmk reservation
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe