தமிழக சட்டப்பேரவையின் 4ஆம் நாள் கூட்ட நிகழ்வுகள் இன்று (17.10.2025) காலை தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் இன்று மாலை சென்னையில் உள்ள அன்புமணியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து பாமக எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை நடத்தினர்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் மொத்தமுள்ள 5 பாமக எம்எல்எக்களில் மூன்று பேர் அன்புமணியை ஆதரித்துள்ளனர். தொடர்ந்து பாமக சட்டமன்ற குழுத் தலைவர், கொறடா ஆகிய பொறுப்புகளை பெற அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் முயன்று வருகின்றனர்.
'8 எம்எல்ஏக்கள் இருந்தால் மட்டுமே கட்சிக்கான சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கொறடா கொடுக்கப்படும். ஐந்து எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் கட்சியில் இருக்கும் பிரச்சனைகளை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே உள்ள ஜி.கே.மணி, அருள் ஆகியோரே நீடிப்பார்கள்' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பாமக எம்எல்ஏக்கள் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டிய நிலையில் அன்புமணியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பாமக ஆதரவு எம்எல்ஏக்கள் சதாசிவம், சிவக்குமார், வெங்கடேசன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.