'Anbumani has no power' - PMK founder Ramadoss interview Photograph: (pmk)
பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலையில் பாமக 2 அணியாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. பாமகவில் நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை ராமதாஸ் வழங்கி வருகிறார்.
ராமதாஸின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் எம்எல்ஏ அருள் சேலத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து பாமகவின் மாவட்ட பொறுப்பில் இருந்து அருளை அன்புமணி நீக்கி உத்தரவிட்டிருந்தார். அந்த நேரத்தில் பாமக எல்.எல்.ஏக்கள் அருள், ஜி.கே.மணி ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். அதேநேரம் அருளை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ராமதாஸ் அறிவித்திருந்தார். என்னால் நியமிக்கப்பட்டவர்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள் எனவும் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அருள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். ''ஜி.கே.மணி போன்றவர்கள், எங்களைப் போன்றவர்கள், கட்சியினுடைய தொண்டர்கள் என அனைவரும் சேர்ந்து இந்த சமுதாயத்தையும், இந்த மக்களையும் வழிநடத்த ஒரு தலைவர் வேண்டும் என அன்புமணிக்கு தலைவர் பதவியை கொடுங்கள் என ரத்த கையெழுத்து போட்டுக் கொடுத்தோம். ரத்த கையெழுத்து போட்டதற்கான நகல் எங்களிடம் இருக்கிறது. எங்களை கொலைகாரன், கொள்ளைக்காரன் இலந்தை பழம் விற்பவர்கள் என்று சொல்கிறாரே அன்புமணி ' என ஆதங்கம் தெரிவித்திருந்தார் அருள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/03/a4273-2025-07-03-11-16-42.jpg)
இதனைத் தொடர்ந்து கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அருளை நீக்குவதாக நேற்று (02/07/2025) அன்புமணி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 'ஒழுங்கு நடவடிக்கைக் குழு கொடுத்த புகார் அடிப்படையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் பாமகவினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது' என அன்புமணி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. நடப்பு பாமக எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கி இருப்பது பாமக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் அதிர்ச்சியைக் கிளப்பி இருந்தது.
இந்நிலையில் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''கட்சியில் இருந்து அருளை நீக்கி அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அருள் பாமகவின் கொறடாவாகவும் அதேபோல் கட்சியின் இணைச்செயலாளர் பொறுப்பிலும் தொடர்வார். அதிமுக, திமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் தகவல்கள் வதந்தி. பாமக மாநில செயற்குழு, நிர்வாகக் குழு,பொதுக்குழு கூடி கூட்டணி குறித்த முடிவை எடுப்போம்.
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து வியாழக்கிழமை தோறும் உங்களிடம் அக்குவேறு ஆணிவேராக சொல்லி வருகிறேன். தமிழக அரசின் செயல்பாடுகளை அடுத்த வியாழக்கிழமை சொல்கிறேன். ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் மகளிர் மாநாடு நடத்துகிறோம். ஜூலை 10 ஆம் தேதி இடமெல்லாம் பார்ப்பதற்கு நான் போகிறேன்' என்றார்.