தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.

Advertisment

ஆனாலும் பாமகவில் தந்தை ராமதாஸிற்கும், மகன் அன்புமணிக்குமான மோதல் போக்கு மிகவும் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் நேரம் நெருங்கியும் தற்போது வரை தீர்வு எட்டப்படாத நிலையில் மாற்றி மாற்றி விமர்சனத்தை வைத்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகத்தை அன்புமணி தரப்பு பா.ம.க நேற்று (14-12-25) தொடங்கியுள்ளது. விருப்பமனு என்ற பெயரில் அன்புமணி பண மோசடி செய்வதாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபியிடம்பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பாமக செயல் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''என்னை துரோகி என அன்புமணி கூறியது மிகவும் வேதனையாக இருக்கிறது. என் அப்பாவையும் என்னையும் ஜி.கே.மணி பிரித்து விட்டார் என அன்புமணி கூறுவது எனக்கு வேதனை அளிக்கிறது. அன்புமணியின் செயல்பாடுகளால் தான் ராமதாஸ் கவலையில் கண்ணீர் வடித்து வருகிறார். உங்கள் பிள்ளையை பார்க்காதீர்கள் என நான் சொன்னால் ராமதாஸ் ஏற்பாரா? பிறகு எப்படி நான் இருவரையும் பிரிக்க முடியும்.

அன்புமணியை மத்திய அமைச்சராக வேண்டும் என ராமதாஸிடம் நான் தான் பேசினேன். அன்புமணியை மத்திய அமைச்சராக்குவதை ராமதாஸ் கடுமையாக எதிர்த்த நேரத்திலும் நானே அவருக்காக பேசினேன். அன்புமணியை வீட்டை விட்டு வெளியே வரச் சொல்லுங்கள் என ராமதாஸிடம் நிர்வாகிகள் கூறினர். இதற்காகவே அன்புமணியை வளர்த்து விட கூட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டோம். ஆனால் அவர் வர மாட்டார். அந்த சூழலில்தான் அவரை கட்சியின் முகமாக கொண்டுவந்தோம். இருவரும் அமர்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும். வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் வைத்து பேசியதால்தான் இந்த பிரச்சனையே முழுமையாக ஆரம்பித்தது. இருவரும் அமர்ந்து பேசி தீர்வு கிடைக்கும் என்றால் அன்புமணி துரோகியாக நினைக்கும் நான் உட்பட பலரும் கட்சியில் இருந்து விலக தயார். நான் கூட கட்சி பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார்'' என்றார். 

Advertisment