பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். மற்றொருபுறம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த 9ஆம் தேதி (09.08.2025) நடைபெற்றது.
இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், “பா.ம.க.வின் தலைவராக அன்புமணி ராமதாஸ் மேலும் ஓராண்டுக்குத் தொடர்வார். அதன்படி அடுத்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதம் வரை பதவி நீடிப்பு வழங்கப்படுகிறது. அதே போன்று கட்சியின் பொதுச் செயலாளராக வடிவேலு ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோரும் ஓர் ஆண்டுக்கு அப்பதவியில் தொடர்வார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான், “இந்த பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதமானது. எனவே இந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லாது.
கட்சியின் நிறுவனரான என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய வழிகாட்டுதல் இல்லாமல் என்னை ஆலோசிக்காமல் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே ஓராண்டுக் காலம் பதவி நீட்டிப்பு தீர்மானம் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இந்நிலையில் அன்புமணி தரப்பில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாகவும் அதில் தலைவர் நீட்டிப்பு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்த ஆவணங்களை ஓரிரு நாட்களில் தேர்தல் ஆணையத்திடம் அன்புமணி சார்பில் முறைப்படி வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.