Advertisment

“தேர்தல் செலவுக்கு நிதி திரட்ட திமுக விஞ்ஞான ஊழல் செய்கிறது” - அன்புமணி குற்றச்சாட்டு!

anse

Anbumani alleged DMK is committing scientific corruption to raise funds for election expenses

அடுத்த ஆண்டு பட்ஜெட் நிதியில் திட்டங்களை செயல்படுத்த இப்போதே தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பதாக என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத சாலைத் திட்டங்களுக்கு அடுத்த ஆண்டு பட்ஜெட் நிதியிலிருந்து நிதி ஒதுக்கி டெண்டர் விடுவதற்கு திமுக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. நெடுஞ்சாலைத் துறையில் நிதி இல்லாத நிலையில், பல பணிகளுக்கு இப்போதே டெண்டர் விட்டு கையூட்டு வசூலிக்கும் நோக்குடன் திமுக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஜனவரி 14ஆம் தேதியிட்ட அரசாணை எண் 6இன்படி, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 312.48 கி.மீ நீளத்திற்கான 80 சாலைப் பணிகளை ரூ.2000 கோடி செலவில் மேற்கொள்வதற்கான சிறப்பு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் நோக்கம் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அல்ல, மாறாக, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கடைசி நிமிடம் வரை, இப்போதைய ஆட்சிக் காலத்தையும் கடந்து அடுத்த நிதியாண்டில் செலவிடப்பட வேண்டிய நிதியையும் சுரண்டி முடிந்தவரை ஊழல் செய்ய வேண்டும் என்ற பேராசை தான். இந்தியாவிலேயே மிக மோசமான ஊழல் ஆட்சி திமுக ஆட்சி தான் என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

Advertisment

ஒவ்வொரு துறையின் சார்பிலும் ஒவ்வொரு ஆண்டும் பல பணிகளை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்படும். பல நேரங்களில் அவற்றில் சில திட்டங்களைச் செயல்படுத்த நிதி இருக்காது. அத்தகைய சூழலில் அந்தத் திட்டங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படுவது தான் நடைமுறை ஆகும். அதே போல் தான் நெடுஞ்சாலைத் துறையிலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி இல்லை. இந்தத் திட்டங்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும். ஆனால், அவ்வாறு அடுத்தடுத்த ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள ரூ.2,000 கோடி மதிப்பிலான 80 சாலைத் திட்டங்களுக்கு இப்போதே டெண்டர் விடுவதற்காகத் தான் திமுக அரசு சிறப்பு நிர்வாக அனுமதியை முன்கூட்டியே வழங்கியிருக்கிறது. இந்தத் திட்டங்களுக்கான நிதி ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு 2026 & 27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து வெவ்வேறு பிரிவுகளின் கீழ் முறையே ரூ.1816.15 கோடி, ரூ.31.80 கோடி, ரூ.101.75 கோடி, ரூ.48.75 கோடி, ரூ.85 லட்சம் என மொத்தம் ரூ.1998.30 கோடியை எடுத்துக் கொள்வதற்கு இந்த சிறப்பு நிர்வாக அனுமதி அரசாணை வகை செய்கிறது.

இவ்வாறு சிறப்பு அனுமதி வழங்குவதால் மக்களுக்கு என்ன பயன்? இந்தத் திட்டங்கள் இப்போதே உடனடியாக செயல்படுத்தப்பட்டு விடுமா? இதனால் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது. இந்தத் திட்டங்கள் இப்போது செயல்படுத்தவும் படாது. மாறாக 2026 & 27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும், நெடுஞ்சாலைத்துறைக்கான மானியக் கோரிக்கையும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இந்தத் திட்டங்களுக்கான நிதியை பெற முடியும். அதுவும் கூட 2026 & 27ஆம் ஆண்டில் இந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கத் தேவையில்லை என்று அரசு முடிவு செய்தால் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படாது. இது தான் அரசுத் திட்டங்களுக்கான செயலாக்க நடைமுறையாகும். அப்படியானால் நிதியே இல்லாத திட்டங்களை செயல்படுத்த சிறப்பு நிர்வாக அனுமதி எதற்கான பெறப்படுகிறது?

ஊழல் செய்வதற்காகத் தான் என்று நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ரூ.2000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டிருப்பதன் மூலம் இந்தத் திட்டங்களுக்கான டெண்டர்களை திமுக அரசு உடனடியாக கோர முடியும். முன்கூட்டியே அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த டெண்டர் நடைமுறைகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் ஒரு தடையாக இருக்க முடியாது. தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை வழங்கி கலெக்ஷன் கமிஷன், கரப்ஷன் செய்வது தான் சிறப்பு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதன் நோக்கம் ஆகும் என்று ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூறுகின்றனர்.

திமுக எவ்வாறு விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்யும் என்பதற்கு இந்த சிறப்பு நிர்வாக அனுமதி ஓர் எடுத்துக்காட்டு. சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதற்கு  திமுக திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு நிதி திரட்டுவதற்காகவே அடுத்த ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கு இப்போதே ஒப்புதல் அளித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் திமுக அரசின் அதிகாரம் முடிவுக்கு வந்து விடும். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் கட்சி தான் அடுத்த ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து முடிவெடுக்க முடியும். அவ்வாறு இருக்கும் போது ஊழலை மட்டுமே ஒற்றை நோக்காக கொண்டு திமுக இவ்வாறு செய்வதை அனுமதிக்க முடியாது.

எனவே, 2026 & 27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதியிலிருந்து நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்த, இப்போதே டெண்டர் கோரும் நோக்குடன் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு நிர்வாக அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும், 80 சாலைப் பணிகளுக்கும் டெண்டர் கோரும் நடைமுறையை திமுக அரசு கைவிட வேண்டும். இதை செய்ய மறுத்தால் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசில் இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

dmk anbumani anbumani ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe