தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Advertisment

இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

Advertisment

இதனிடையே, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘41 பேர் பலி தொடர்பாக எங்கள் மீது காவல்துறையால் புணையப்பட்ட வழக்கு போடப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆரில் அறிவுரை வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், என்ன அறிவுரை என்று கூறவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது. இதனிடையே, அரசு தரப்பில், ‘முன்ஜாமீன் கோரியவர் முன்னாள் எம்.எல்.ஏ என்பட்கால் சிறப்பு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மனுதாரர்கள் கேட்ட முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (03-10-25) நீதிபதி ஜோதிமணி முன்பு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டதாவது, ‘எங்கள் மீது வழக்கு தொடர்ந்ததில் காவல்துறைக்கு உள்நோக்கம் உள்ளது. காவல்துறையின் செயல்பாடு ஏற்புடையது அல்ல. நடந்த சம்பவத்தில் மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது. கரூரில் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்தனர். காவல்துறை ஏன் தடியடி நடத்தியது?. ஒட்டுமொத்தமாக மக்கள் கூடிய பிறகு காவல்துறை தடியடி நடத்தினர். கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கோருவது எதனால்? உரிய பாதுகாப்பை வழங்கவே.

Advertisment

பரப்புரைக் கூட்டத்திற்கு ஒரு நாள் முன்புதான் அனுமதி கொடுத்தனர். ஒருநாளில் எவ்வாறு எங்களால் ஏற்பாடு செய்ய முடியும்?. வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படும் என எங்களுக்கு தெரியவில்லை. எந்த விதிமுறைகளையும் நாங்கள் மீறவில்லை. வேலுச்சாமிபுரம் குறுகிய சாலை எனில் போலீசார் அனுமதி மறுத்திருக்கலாமே? ஒரு நாளைக்கு முன்பாகவே வேலுச்சாமிபுரத்திற்கு பதில் வேறு இடத்தில் அனுமதி கேட்டு முறையிட வந்தோம். ஆனால், நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததால் முறையிட முடியவில்லை. பரப்புரைக்கு காலியான ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. விபத்துக்களை விபத்துக்களாக பார்க்க வேண்டும். அதற்காக தவெக பொதுச் செயலாளர் மீது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்?தொண்டர்களை கொல்ல வேண்டுமென்ற எண்ணம் இல்லை. இது திட்டமிடப்பட்ட செயல் அல்ல. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு யாருக்கு பொறுப்பு உள்ளது?. கூட்டத்தை கட்டுப்படுத்துவது அரசின் கடமை. மக்கள் அதிகமாக வருவர் என போலீஸ் கணித்திருக்க வேண்டும், நாங்கள் அதில் புலமை பெற்றவர்கள் அல்ல. மொத்த குழப்பத்திற்கு காவல்துறை தான் காரணம். ’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரசு தரப்பில் வாதிட்டதாவது, ‘எவ்வித சாட்சி, ஆவணங்களின்றி அரசு மீது குற்றம் சுமத்துவதை ஏற்க இயலாது’ என்று மனுதாரர்களின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே நீதிபதி, ‘உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையையே நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது’ என்று வேதனையோடு கூறினார்.

தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில், ‘காலணி மற்றும் சில ரசாயனங்கள் கூட்டத்தில் இருந்த சிலர் வீசி எறிந்தனர். ஒரு பொதுச் செயலாளர் தொண்டரை கொலை செய்ய முயல்வாரா?. பரப்புரைக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில் எனக்கு பொறுப்பல்ல, மதியழகனுக்கே பொறுப்பு. அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மதியழகன் தவறு செய்யவில்லை, காவல்துறையும் அரசும் தான் தவறு செய்தன. விஜய் 4 மணி நேரம் தாமதமாக கரூர் பரப்புரைக்கு வந்தார். பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை பரப்புரைக்கு அனுமதி பெற்றோம். ஆனால், விஜய் இரவு 7 மணிக்கு வந்துவிட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டது.