புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகா ஏம்பல் சரகம் ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையா மகன் ராமநாதன் (46). இவர் அதே ஊரில் கிராம உதவியாளராக பணி செய்து வருகிறார். தற்போது எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று (20-11-25) காலை வழக்கம் போல ஊரில் உள்ள குளத்தில் குளிக்க ராமநாதன் சென்றுள்ளார். ஆனால், அவர் நீண்ட நேரமாக வீடு வந்து சேரவில்லை. அதனை தொடர்ந்து குளத்தில் குளிக்கச் சென்றவர்கள், ராமநாதன் தண்ணீரில் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதற்கிடையில், தகவல் அறிந்து வருவாய்த்துறையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து ராமநாதன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வழக்கமாக ராமநாதன் இந்தக் குளத்தில் தான் குளிப்பார். அதே போல இன்றும் குளிக்க சென்றுள்ளார். குளிக்க குளத்திற்குள் இறங்கும் போது பாசிபடர்ந்திருந்த தரையில் வழுக்கி நிலைதடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டு தண்ணீருக்குள் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் போலீசார் சந்தேகித்துள்ளனர்.
எஸ் ஐ ஆர் பணியில் ஈடுபட்டிருந்த கிராம உதவியாளர் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Follow Us