நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர் வனஜா (40, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). சில ஆண்டுகளுக்கு முன்பாக தனது கணவனை இழந்த இவர், இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். இவர் பல்வேறு சிரமங்களுக்கிடையே தனியாக குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், பர்மடோ எரிக் என்பவர் இணையதளம் மூலமாக அப்பெண் அறிமுகமாகியுள்ளார்.
இங்கிலாந்தில் பொறியாளராக பணியாற்றி வருவதாகக் கூறிய அவர், தன்னுடைய மனைவியும் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனக்கு இரு குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை வளர்ப்பதற்குத் தான் மிகவும் சிரமப்படுவதாகவும் கூறியுள்ளார். அதோடு, அதிகப்படியான வருமானம் இருந்த போதிலும் தனக்கும், குழந்தைகளுக்கும் துணைக்கு ஆள் இல்லாமல் சிரமப்படுவதாகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். இதனால் மனமுருகிப் போன வனஜா, அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் மிக நெருக்கமாக மாறவே, நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? என அந்த நபர் வனஜாவிடம் கேட்டுள்ளார். தனக்கும், பிள்ளைகளுக்கும் ஆதரவாக இருக்க ஒரு நபர் தேவை என்பதால், அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விரைவில் உன்னை வந்து பார்க்கிறேன் என்று அந்த நபர் வனஜாவிடம் கூறியுள்ளார். வனஜாவும் தனது வருங்கால கணவரின் வருகைக்காகக் காத்திருந்தார்.
இந்த நிலையில், வனஜாவுக்கு விமான நிலையத்தில் இருந்து, ஒரு போன் கால் வந்தது. அதில், ‘பர்மடோ எரிக் என்பவர் இங்கிலாந்தில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் தன்னுடன் அளவுக்கு அதிகமாகத் தங்கக் கட்டிகளை எடுத்து வந்துள்ளார். இந்தியச் சட்ட விதிகளுக்கு மாறாக அவர் அதிக அளவு தங்கம் கொண்டு வந்திருப்பதால், அதை வெளியே எடுத்துச் செல்ல ஜிஎஸ்டி உள்பட பல்வேறு வரிகளைச் செலுத்த வேண்டும். அதுவரை, அவரை கைது செய்து சிறையில் வைப்போம்’ என்று கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வனஜா, தனது வருங்கால கணவரைக் காப்பாற்றுவதற்காக, தன்னிடம் இருந்த 25 லட்சம் ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இருப்பினும், வெவ்வேறு நபர்கள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால் குழப்பமடைந்த வனஜா, அவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அவர்கள் ஏதும் பதில் சொல்லாமல், போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். பின்னர், இது மோசடி என்பதை உணர்ந்த வனஜா, சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருப்பதுபோல படங்களைச் சித்தரித்து பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், அந்த நபர்கள் பேசியதும் விர்ச்சுவல் எண் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, அறிமுகமில்லாத நபர்களுக்குப் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/19/police-2026-02-19-18-53-53.jpg)