கோவை, கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மதுரையை சேர்ந்த 27 வயதான தேவா என்கின்ற ரித்திஷ். கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார். இவரது மனைவி இந்திராணி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. 

Advertisment

இந்த நிலையில் இந்திராணிக்கும், அவரது சித்தப்பா வினோத்குமாருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது, வினோத்குமார் கரூரில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வரும் நிலையில் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவர் தேவாவிற்கு தெரியவர கடும் ஆத்திரமடைந்து மனைவி இந்திராணியை கண்டித்துள்ளார். ஆனால், அதனையெல்லாம் கண்டுகொள்ளாத இந்திராணி வினோத் குமாருடனான உறவை தொடர்ந்து வந்துள்ளார். 

Advertisment

இதனிடையே தங்களது திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவர் தேவாவை தீர்த்துக்கட்ட, சித்தப்பா வினோத் குமாருடன் சேர்ந்து இந்திராணி திட்டம் தீட்டுள்ளார். அதன்படி கடந்த 28 ஆம் தேதி,  இரவு இந்திராணி, வினோத்குமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் வீட்டில் வைத்து தேவாவுடன் தகராறு செய்து, கத்தியால் சராமாரியாகக் குத்தியுள்ளனர். அதில், சம்பவ இடத்திலேயே தேவா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடலைத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் ரயில் தண்டவாளத்திற்குக் கொண்டு சென்று, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக நம்ப வைக்கும் வகையில் போட்டுச் சென்றனர். இதற்கிடையில் தேவாவின் தாயார் தன் மகன் மாயமானதாக கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி தேவாவை தேடி வந்தனர். 

இதை அறிந்த இந்திராணி  31 ஆம் தேதி காவல்துறையினரிடம் கணவர் தேவாவை சித்தப்பா வினோத் குமாருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய வினோத்குமார் உள்ளிட்டோரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இந்திராணியை போலீசார் பொள்ளாச்சி ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி வருகிற 12-ம் தேதி வரை இந்திராணியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Advertisment

மேலும் தேவா கொலையில் தொடர்புடைய வினோத்குமார் உள்ளிட்டோரைப் பிடிக்கக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கோவை மட்டுமின்றி கரூர், திருவாரூர்  உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு வினோத்குமார் உள்ளிட்டோரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 
 

செய்தியாளர் - நாகேந்திரன்