உத்தரகாண்ட் மாநிலம், ரேஷம் பாரி பகுதியில் அத்ரியா கோயில் உள்ளது. இந்த பகுதியில் ஷாஹித் என்பவர் நீண்ட நாட்களாக வேலை பார்த்து வருகிறார். அவர் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர். இது ரமலான் மாதம் என்பதால், அவர் தொழுகையில் ஈடுபட்டார். அவர் தொழுகை செய்த இடம் கோயிலுக்குச் சொந்தமான இடம் என்று கூறி ஒரு கும்பல் அவர் மீது கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், ஷாஹித்தை இந்து மதம் சம்பந்தமாகக் கோஷமிடவும் வற்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisment

இதையடுத்து, ஷாஹித்துடன் சேர்ந்து இஸ்லாம் அமைப்பினர் சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பரோலில் வெளிவந்த கொலைக் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, கலவரம் அல்லது வன்முறை போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பொருட்டு, இருதரப்பினரையும் அமைதி காக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சம்பவம் குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.  

Advertisment

இதனிடையே, இது குறித்துப் பேசிய கோயில் மேலாளர் அரவிந்த் சர்மா, ‘கோயில் நிலத்தில் வேறு எந்த மதம் சம்பந்தமான செயல்பாடுகளையும் அனுமதிக்க முடியாது’ என்று  கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி செய்து வருகிறது. புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.