பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் இருந்து பிகார் மாநிலம் சஹர்சா வரை காரீப் ரத் விரைவு ரயில் (வண்டி எண் : 12204) இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமிர்தசரஸ் நகரில் இருந்து சஹர்சா நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த விரைவு ரயிலின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. ரயிலில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அதோடு அம்பாலா ரயில் நிலையத்திற்கு அரை கிலோ மீட்டருக்கு முன்னதாக ரயில் நிறுத்தப்பட்டு தீயினால் பாதிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் மற்ற பெட்டிகளில் இருந்து பிரித்துத் தனிமைப்படுத்தப்பட்டன. மற்றொருபுறம் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப்பணியிலும் ஈடுபட்டனர். மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
இந்தத் தீ விபத்தில் 3 ரயில் பெட்டிகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. நல்வாய்ப்பாகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.