தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளை கூட்டணி தலைமை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தநிலையில் பாஜகவின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தமிழகம் வந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் அங்கம் வகிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''என்னதான் இருந்தாலும் இது பங்காளி சண்டை. பழசையெல்லாம் நினைத்துக் கொண்டு இருப்பதைவிட மக்கள் நலன், தமிழ்நாட்டு நலனுக்காக விட்டுக்கொடுப்பது தவறில்லை. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. ஓரணியில் திரண்டு மீண்டும் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி வருவதற்கு, மக்களாட்சி வருவதற்கு, நல்லாட்சி வருவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. மக்கள் விரும்பும் ஒரு நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கும் முயற்சிக்கு நாங்களும் உறுதுணையாக இருப்பதற்காக எங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக புறப்பட்டுச் செல்கிறோம்'' என்றார்.
எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்றீர்களே என்ற கேள்விக்கு, ''பியூஸ் கோயலை தனியார் ஹோட்டலில் சந்திக்க உள்ளேன். சந்தித்து விட்டு நான் உங்களுக்கு பேசுகிறேன்'' என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/21/727-2026-01-21-11-28-58.jpg)
இந்நிலையில் தனியார் ஹோட்டலுக்கு சென்ற டி.டி.வி.தினகரனை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் பியூஸ் கோயலை சந்தித்த டி.டி.வி கூட்டணியில் இணைத்துக்கொண்டார். இந்த சந்திப்பில் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர். ஆனால் இந்த சந்திப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய அங்கமாக இருக்கும் அதிமுகவின் ஒரு நிர்வாகிகள் கூட கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்க கூடியதாக இருந்தது. முற்றுமுழுதாக பாஜகவின் முயற்சியிலேயே அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வந்துள்ளது. எனவே டிடிவியை பொறுத்தவரை பாஜகவுடன் தான் கூட்டணி வைத்துள்ளார் என்றே எடுத்துக்கொள்ள முடியும் என கருத்து தெரிவித்து வருகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போது வரை அன்புமணியின் பாமக, புதியநீதிக்கட்சி, ஐ.ஜெ.கே,அமமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ள நிலையில் அடுத்தகட்டமாக தேமுதிகவை இன்றைக்குள் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/21/726-2026-01-21-11-28-27.jpg)