AMMK Deputy General Secretary who joined DMK
வருகிற சட்டமன்றத் தேர்தலையொட்டி மீண்டும் பா.ஜ.கவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியேறினார். எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அந்த கூட்டணியில் இணைய மாட்டேன் என டிடிவி தினகரன் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இருப்பினும் டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணிக்குள் இணைக்கும் முயற்சியில் பா.ஜ.க தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.
இந்த சூழ்நிலையில், தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை நேற்று முன்தினம் (21-01-26) டிடிவி தினகரன் சந்தித்து அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக் கொண்டார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (23-01-26) நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடக்க விழாவில் டிடிவி தினகரன் பங்கேற்கவுள்ளார். எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று அழைத்து அவர் இருக்கும் கூட்டணியில் சேர மாட்டோம் என டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வந்த நிலையில், அதிமுக - பா.ஜ.க அவர் இணைந்ததால் அமமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக -பா.ஜ.க கூட்டணிக்கு அமமுக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி மாணிக்கராஜா எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை இன்று கட்சியில் இருந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக நீக்கியுள்ளார். அதனை தொடர்ந்து அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.வி.எஸ்.பி மாணிக்கராஜா இன்று காலையே அண்ணா அறிவாயலத்துக்குச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அவருடன் சேர்ந்து 3 அமமுக மாவட்டச் செயலாளர்களும் திமுகவில் இணைந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாணிக்கராஜா, “அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அமமுகவை, மறுபடியும் பழைய நிலைக்கு ஆதரித்து செல்கின்ற போது என்னை போன்ற தொண்டர்கள், நிர்வாகிகள் டிடிவி தினகரனிடம் பலமுறை எடுத்து சொன்னோம். எதற்கு அமமுக ஆரம்பிக்கப்பட்டதோ, அதற்கு அர்த்தமே இல்லாமல் எங்கள் தலைமை மறுபடியும் அங்கு சென்றதால் எங்கள் தொண்டர்களின் விருப்பப்படி நல்லாட்சி கொடுக்கின்ற முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறோம். அமமுக தொடங்கப்பட்டதற்கான நோக்கமே நிறைவேறாமல் போனதால், அதில் தொடர்வது அர்த்தமே இல்லை. மேலும் பல்வேறு அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைவார்கள்” என்று கூறினார்.
Follow Us