AMMK back in NDA alliance? - TTV alert for MLAs Photograph: (ammk)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு கட்சிகளும், தங்களது கட்சிக்குள் குழு ஒன்றை அமைத்து தேர்தல் அறிக்கையையும், தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பாஜக-அதிமுக கூட்டணியில் இடம் பெறும் மற்ற கட்சிகளையும் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த டி.டி.வி.தினகரன் இதில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்கு வலுசேர்க்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தயாராக இருக்கும்படி டி.டி.வி.தினகரன் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எத்தனை இடங்களில் அமமுக போட்டியிடுவது; யார் யாருக்கெல்லாம் வாய்ப்புகள் கொடுப்பது என்பது குறித்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்திருந்த டிடிவி.தினகரன் பேசுகையில், ''உரிய நேரத்தில் அமமுக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை உரியவர்கள் அறிவிப்பார்கள். 2026இல் கூட்டணி ஆட்சிதான் வரும். நாங்கள் இடம்பெறப்போகும் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். இன்றைக்கு சில உள்ளங்கள் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழ்நாட்டில் வர வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார்கள்.
எனக்கு மனசாட்சி இருக்கிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எல்லாம் தாண்டி தமிழ்நாட்டின் நலன் எங்களுக்கு முக்கியம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது. நாங்கள் ஒரு சின்ன கட்சி தான். ஆனால், நாங்கள் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் இருப்பதாக நான் நம்புகிறேன்'' எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us