Advertisment

ஆங்கில மொழி சர்ச்சை; “அடிமை மனநிலையில் இருந்து விடுபட வேண்டும்” - அமித் ஷா புதிய கருத்து

amitshah

Amit Shah's says get rid of the slave mentality at English language controversy

நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் கூடிய விரைவில் வெட்கப்படுவார்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பிய நிலையில், அடிமைத்தனத்தின் மனநிலையை அகற்ற மொழியியல் பெருமை அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்தி திணிப்புக்கு எதிராகவும், இருமொழி கொள்கையிலும் தனது உறுதியான நிலைப்பாட்டைத் தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது.

Advertisment

இதனிடையே, கடந்த ஜூன் 19ஆம் தேதி புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமித் ஷா, “இந்த நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் கூடிய விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூக சூழல் உருவாகும் நாள் வெகு தூரம் இல்லை. உறுதியானவர்களால் மட்டுமே இந்த மாற்றத்தை கொண்டு வர முடியும். நமது நாட்டின் மொழிகள், நமது கலாச்சாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன். நமது மொழிகள் இல்லையென்றால், நாம் முழுமையான இந்தியர்களும் இல்லை. அந்நிய மொழிகளுடன் இந்திய மொழியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்தியாவின் நாகரீகத்தையும், ஆன்மீகத்தின் வேர்களையும் வெளிநாட்டு மொழிகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. அரைகுறையான வெளிநாட்டு மொழிகளால், முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்த போர் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்தியச் சமூகம் இதில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், சுயமரியாதையுடன் நமது சொந்த மொழிகளால் நாம் நமது நாட்டையும் வழி நடத்துவோம், இந்த உலகத்தையும் வழி நடத்துவோம். இதில் யாரும் சந்தேகப்படத்தேவையில்லை” என்று கூறினார்.

ஆங்கிலம் மொழி தொடர்பான அமித்ஷாவின் கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “உங்கள் தாய் மொழியை போல ஆங்கிலமும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஏழை குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய இயக்கங்கள் தடுத்து வருகிறது. மக்கள் கேள்வி கேட்பதையோ, முன்னேறுவதையோ, சமமாக நிற்பதையோ அவர்கள் விரும்பவில்லை” என்று கூறினார். 

ஆங்கிலம் குறித்து தனது கருத்துக்களால் சர்ச்சையைக் கிளப்பிய சில நாட்களுக்குப் பிறகு, மொழி தொடர்பான கருத்து ஒன்றை அமித் ஷா தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை. எந்த வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது. ஆனால், நமது சொந்த மொழியை மிகைப்படுத்துவதற்கும், அதில் பேசுவதற்கும், அதில் சிந்திப்பதற்கும் முயற்சி இருக்க வேண்டும். அடிமைத்தன மனநிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும். ஒருவர் தனது சொந்த மொழியில் பெருமைப்பட்டு அதில் தன்னை வெளிப்படுத்தும் வரை, அந்த மன நிலையில் இருந்து நாம் விடுபட முடியாது. மொழி என்பது நாட்டினுடைய ஆன்மா. அனைத்து இந்திய மொழிகளையும் குறிப்பாக அதிகாரப்பூர்வ மொழிகளை நாம் பாதுகாத்து வளப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். நாம் நமது மொழியை உயிருடன் வைத்திருக்க வேண்டும். இது வெறும் தகவல் தொடர்பு பற்றியது அல்ல, நமது தேசத்தின் அடையாளத்தை பற்றியது” என்று கூறினார். 

Amit shah ENGLISH Language
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe