Union minister Amit shah in lok sabha
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது, வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்தும் பீகாரில் நடக்கும் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அதற்கு அனுமதி தராமல் மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்ற அவையை தொடர்ந்து நடத்தி வருகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (21-08-25) முடிவடைய உள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் போன்றவர்கள் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தாலோ அல்லது காவலில் இருந்தாலோ அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (20-08-25) நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மசோதாவில், 5 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை விதிக்கும் வகையிலான எந்த ஒரு குற்றச்சாட்டின் கீழும் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் போன்றவர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால் 31வது நாளில் அவர்கள் தனது ராஜினாமாவை சமர்பிக்க வேண்டும். ஒருவேளை ராஜினாமாவை சமர்பிக்கவில்லை என்றால் அவர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யப்படுகிறது.
இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் எனவும் இந்த புதிய மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமித் ஷா தாக்கல் செய்த மசோதா நகலை எதிர்க்கட்சிகள் கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அமித் ஷா மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் மசோதா மற்றும், யூனியன் பிரதேச அரசு திருத்தம் மசோதா ஆகிய 2 மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இந்த மூன்று மசோதாக்களும் ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கும், மத்திய அமைச்சர்கள் மற்றும் மையத்தில் உள்ள பிரதமருக்கும் பொருந்தும் வகையில் முற்றிலும் புதிய சட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த மசோதா குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, “இது முற்றிலும் கொடூரமான விஷயமாக நான் பார்க்கிறேன். இதை ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை என்று சொல்வது மக்களின் கண்களில் ஒரு திரையை போர்த்துவது போன்றது. நாளை, நீங்கள் ஒரு முதலமைச்சருக்கு எதிராக எந்த வழக்கையும் பதிவு செய்யலாம், அவரை 30 நாட்களுக்கு தண்டனை இல்லாமல் கைது செய்யலாம். அவர் முதலமைச்சராக இருப்பதை நிறுத்திவிடுவார்களா? இது முற்றிலும் அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் ஜனநாயக விரோதமானது” என்று கடுமையாக விமர்சித்தார்.