Union minister Amit shah
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது, வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்தும் பீகாரில் நடக்கும் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அதற்கு அனுமதி தராமல் மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்ற அவையை தொடர்ந்து நடத்தி வருகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (21-08-25) முடிவடைய உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (20-08-25) நாடாளுமன்றத்தில் மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்த உள்ளார். அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் போன்றவர்கள் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தாலே அவர்களை பதவி நீக்கம் செய்யும் வகையிலான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்படி, 5 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை விதிக்கும் வகையிலான எந்த ஒரு குற்றச்சாட்டின் கீழும் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால் 31வது நாளில் அவர்கள் தனது ராஜினாமாவை சமர்பிக்க வேண்டும். ஒருவேளை ராஜினாமாவை சமர்பிக்கவில்லை என்றால் அவர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யப்படுகிறது.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், கிட்டத்தட்ட 6 மாதங்களாக ராஜினாமா செய்யவில்லை. அதன் பின்னர், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் பேரில், உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன் பின்னர், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
நாடாளுமன்றத்தில் அமித் ஷா தாக்கல் செய்யும் மசோதாக்களில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான மசோதாவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பிரிவு 370 ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.