நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 1 வாரமாக நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடக்காமல் முடங்கியது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்று (28-07-25) நடைபெற்றது. இந்த விவாதத்தில்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் உள்ளிடோர் பேசினர். அதன்படி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது, இந்தியா பாகிஸ்தான் தாக்குதலின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் போர் நிறுத்தக் கோரிக்கை விடுத்தது குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசிக் கொண்டிருந்தார். ஜெய்சங்கரின் கூற்றுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

இதில் பொறுமையிழந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜெய்சங்கர் பேசிக் கொண்டிருந்த போது குறுக்கிட்டு எழுந்து நின்று பேசினார். கோபமாகப் பேசிய அமித் ஷா, “எதிர்க்கட்சியினருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் வேறு சில நாடுகளின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இதில் எனக்கு ஆட்சேபனை உள்ளது. அவர்களின் கட்சியில் அந்நியர்களின் முக்கியத்துவத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களின் கட்சியின் அனைத்து விஷயங்களும் இங்கே சபையில் திணிக்கப்பட வேண்டும் என்று எந்த அர்த்தமும் இல்லை. அதனால் தான் அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கு அங்கேயே அமர்ந்திருப்பார்கள்.

அவர்களுடைய தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, நாங்கள் பொறுமையாகக் கேட்டோம். நாளை, அவர்கள் எத்தனை பொய்களைச் சொன்னார்கள் என்பதை நான் பட்டியலிடுவேன். இப்போது, அவர்களால் உண்மையைக் கையாள முடியவில்லை. இவ்வளவு முக்கியமான பிரச்சினை விவாதிக்கப்பட்டு, வெளியுறவு அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்த வகையான இடையூறு பொருத்தமானதா? சபாநாயகர் ஐயா, நீங்கள் இப்போது அவர்களுக்குப் புரிய வையுங்கள், அல்லது எங்கள் உறுப்பினர்களை பின்னர் கட்டுப்படுத்த முடியாது” எனப் பேசி அமர்ந்தார்.