பீகார் மாநிலத்தில், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநில சட்டசபையின் தவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில், ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால், அம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.
இதனிடையே ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள், தனது கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களை அறிவித்து அறிவித்து வருகின்றன. எதிர்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டு வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. இன்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெறவுள்ளது.
பீகார் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கக்கூடிய நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் வேட்பாளர் பிறகு முடிவு செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமித் ஷாவிடம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித் ஷா, “நிதிஷ் குமார் முதல்வராக இருப்பாரா இல்லையா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. இப்போதைக்கு, நாங்கள் நிதிஷ் குமார் தலைமையில் போட்டியிடுகிறோம். தேர்தலுக்குப் பிறகு, அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து தங்கள் தலைவரை முடிவு செய்யும்.
கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நிதீஷ் குமார் பிரதமர் நரேந்திர மோடியை அணுகி, பீகார் தனது கட்சியை விட அதிக இடங்களைப் பெற்றதால், பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் நாங்கள் எப்போதும் எங்கள் கூட்டணியை மதித்து வந்தோம். மேலும் நிதிஷ் குமார் சம்பாதித்த மரியாதை மற்றும் அவரது மூப்புத்தன்மையின் அடிப்படையில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்” என்று கூறினார்.