கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக கடந்த 12ஆம் தேதி டெல்லிக்குச் சென்று சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக சுமார் 100 கேள்விகள் வரை எழுப்பியதாகக் கூறப்பட்டது.

Advertisment

இந்நிலையில் விஜய், இரண்டாம் நாளாக இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது, கரூர் பரப்புரைக் கூட்டத்திற்கு சுமார் 7 மணி நேரம் தாமதமாக வர காரணம் என்ன? நீங்கள் குடிநீர் பாட்டில்களை தூக்கி வீசும்போது கூட்ட நெரிசலை கவனிக்கவில்லையா? வாகனத்தின் மேல் இருந்த நீங்கள் நிலைமை மோசமானதை அறியவில்லையா? காவல்துறை பொது அறிவிப்புகளை தொடர்ந்து செய்தது என கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அளித்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சரமாரி கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையின் மூலம், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரை சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

Advertisment

இன்று  சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விஜய்யிடம் விசாரணை நடைபெற்ற நிலையில்  இரண்டாம் கட்ட விசாரணை நிறைவு பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாளையும் விஜய்யிடம் விசாரணையை தொடர்வது குறித்து சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் நிர்வாகி சி.டி.நிர்மல் குமார் பேசுகையில், 'இங்கு உடனே செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விஜய் கைது, குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்ற பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இவை எல்லாம் வதந்தி. தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த வழக்கில் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது எங்களை விட ஊடகங்களுக்கு நன்றாக தெரியும். தமிழக மக்களுக்கும் நன்றாக தெரியும்.

Advertisment

ஏதோ கிளி ஜோசியம் கேட்டு விட்டு பேசுவது போல சிலர் பேசி வருகின்றனர். இதையெல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதற்கு அடுத்து எந்த சம்மனும் இல்லை. தேவைப்பட்டால் சிபிஐக்கு எங்களுடைய ஒத்துழைப்பு இருக்கும். கடந்த முறை  மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்த போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 41 பேர் மரணத்திற்கு காரணம் செந்தில்பாலாஜி என்று அமித்ஷா முன்னிலையில் சொன்னார். இது சம்பந்தமாக ஊடகங்கள் விவாதம் நடத்தி இருக்க வேண்டும். இது சம்பந்தமாக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதா என்று கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். இது மாதிரியாக நிறைய விஷயங்களுக்கு கேள்வி எழுப்பாமல், இன்று காலையில் இருந்து பல தவறான தகவல்களை பதிவு செய்து வருகிறார்கள். இது  வருந்தத்தக்க செயல். தயவு செய்து இதுபோல செய்ய வேண்டாம்' என்றார்.