குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே மாநிலங்களவை சபாநாயகராகவும், குடியரசு துணைத் தலைவர் ஆகிய பதவியில் இருந்த ஜக்தீப் தன்கர் திடீரென்று ராஜினாமா செய்திருந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மருத்துவ காரணங்களுக்காக குடியரசுத் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக ஜக்தீப் தன்கர் தெரிவித்திருந்தாலும், பா.ஜ.க தலைவர்கள் - ஜக்தீப் தன்கர் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் தான் அவர் ராஜினாமா செய்திருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். தன்கரின் ராஜினாமா குறித்து ஒன்றிய அரசும் பாஜகவும் மௌனம் காத்து வருவதற்கு பின்னால் சதி இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பினர்.

Advertisment

இதனிடையே, ஜக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முறைப்படி ஏற்று, அந்த கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். பதவிக்காலம் முடியும் முன்பே மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்த விவகாரம், முதல் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறிய சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால், ஜக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட பிறகு இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தது மற்றும் ஜக்தீப் தன்கருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தாமல் இருந்தது என பல்வேறு விஷயம் நடந்தது. இது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் ஜக்தீப் தன்கர் எங்கே என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி எம்.பி சஞ்சய் ராவத் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ‘ஜூலை 21 முதல் இன்று வரை, நமது முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அவர் தற்போது எங்கே இருக்கிறார்? அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது? இந்த விஷயங்களில் தெளிவு இல்லை. மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலர் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றனர், ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர். அவருடனோ அல்லது அவரது ஊழியர்களுடனோ எந்த தொடர்பும் இல்லை, இது மிகுந்த கவலைக்குரிய விஷயம். தங்கர் தனது வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பாதுகாப்பாக இல்லை என்றும் வதந்திகள் பரவி வருகிறது. தங்கரின் இருப்பிடம் குறித்து கவலைப்பட்டு வருவதால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா விவாதத்துக்கு உள்ளான நிலையில் முதல் முறையாக இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டியளித்த அமித் ஷாவிடம், தன்கரின் ராஜினாமா விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித் ஷா, “உண்மை மற்றும் பொய் பற்றிய உங்கள் விளக்கம் எதிர்க்கட்சிகள் சொல்வதை அடிப்படையாகக் கொண்டது போல் தெரிகிறது. இதையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தன்கர் ஒரு அரசியலமைப்பு பதவியை வகித்தார் மற்றும் அரசியலமைப்பின்படி தனது கடமைகளை நிறைவேற்றினார். தனிப்பட்ட உடல்நலக் காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்தார். இந்த விஷயத்தில் அதிகம் யோசிக்கக்கூடாது” என்று கூறினார். புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்ய செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.