ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்துள்ளதாகவும், இந்தியா மிக அதிகமான வரி விதிப்பதாகவும் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படுவதாக கடந்த 30ஆம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அமெரிக்காவில் இருந்து பால், நெய், கோதுமை, சோயாபீன்ஸ், ஆப்பிள், திராட்சை, சோளம் உள்ளிட்ட வகைகளை இந்தியாவில் விற்பனை செய்ய அந்த நாடு அனுமதி கோரியதாகவும், இவை அனைத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தாணியங்கள் அதனால் இந்தியாவின் விவசாயிகள் நலன் பாதிக்கப்படும் என்று இந்தியா கூறி அதற்கு மறுத்ததாகவுன் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா பொருட்களுக்கு 25% வரி விதிப்பு அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  

இதனையடுத்து, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே, இந்தியாவை டிரம்ப்ன் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இந்தியா பொருளாதாரம் இறந்து போய்விட்டதாகவும், உலகிலேயே அதிக வரியை இந்தியா விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். இந்தியா குறித்து டிரம்ப் விமர்சித்தது குறித்து பிரதமர் மோடி உட்பட எந்த ஒன்றிய அமைச்சரும் பதிலளிக்காமல் மறுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், கூடுதல் வரியாக 25 சதவீதத்தை உயர்த்தி இந்தியாவுக்கு மொத்தமாக 50% வரி விதிப்பதாக டிரம்ப் நேற்று முன் தினம் (06-08-25) அதிரடியாக அறிவித்தார். வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிரதமர் மோடி சீனா டெல்ல உள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பை மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கிய வைத்து பேசியதாவது, “எங்களைப் பொறுத்தவரை, எங்கள் விவசாயிகளின் நலனே எங்கள் முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் அதற்காக நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், ஆனால் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். இன்று, இந்தியா நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளுக்கு உதவ தயாராக உள்ளது” என்று கூறினார்.

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்த பிறகு, இந்தியாவுடனான எந்தவொரு வர்த்தக பேச்சுவார்த்தையும் நடைபெறாது என அமெரிக்க அதிபர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப்பிடம், 50 சதவீத வரி காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், “இல்லை, நாங்கள் அதை தீர்க்கும் வரை இல்லை” என்று கூறினார். இதையடுத்து ரஷ்யாவிடம் மற்ற நாடுகளும் எண்ணெய் வாங்கும் போது இந்தியாவுக்கு மட்டும் குறி ஏன்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிரம்ப், “சில மணி நேரம் தான் ஆகியுள்ளது. என்ன நடக்குதுன்னு பார்ப்போம். இன்னும் நிறைய பார்க்கப் போறீங்க... இன்னும் நிறைய இரண்டாம் கட்டத் தடைகளைப் பார்க்கப் போறீங்க” என்று பதிலளித்தார்.