war Photograph: (world)
ஈரான் மற்றும் அமெரிக்க இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, இன்று (28-02-26) ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல், வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அப்பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனிடையே ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அமெரிக்காவும் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, தெஹ்ரானில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. எனவே, ஈரான் விரைவில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க மீது பதில் தாக்குதலைத் தொடுக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள நாடுகளிடையே பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஈரான் தாக்குதலைத் தொடங்கும் பட்சத்தில் அதனுடன் நட்பு நாடுகளும் கைகோர்க்குமானால், இந்த தாக்குதல்கள் உலகப் போரை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளும் தொடர் தாக்குதலை நிகழ்த்திவரும் நிலையில், ஈரான் முக்கிய தலைவர் காமினி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டார். இந்த தாக்குதலில் இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ஒரே நேரத்தில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, தெஹ்ரானில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஈரான் மீது கடும் தாக்குதல்களை நிகழ்த்த ட்ரம்ப் உத்தரவிட்ட நிலையில், அமெரிக்கப் போர்க் கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பிராந்திய நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
ஏற்கனவே, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் குறித்தான பேச்சுவார்த்தை கடந்த வியாழக்கிழமை (26-02-26) அன்று ஜெனிவாவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அராக்சி அப்பாஸ் தலைமையிலான குழுவினர் மற்றும் அமெரிக்கத் தரப்பில் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையை ஓமன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர அல்புசைதி ஒருங்கிணைத்தார். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் இந்த போர் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Follow Us