திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 2015ஆம் ஆண்டு பவித்ரா என்பவர் காணாமல் போனார். இந்த சம்பவத்தில் ஷமீல் அகமது என்பவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் வீடு திரும்பிய அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனவே ஷமீல் அகமது உயிரிழப்புக்குக் காவல் துறையே காரணம் எனக் கூறி அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisment

இந்த போராட்டத்தின் பொழுது திடீரென கலவரம் வெடித்தது. இதில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 71 பேர் காயமடைந்தனர். மேலும் அங்குப் பாதுகாப்பிற்காகக் கொண்டுவரப்பட்ட காவல் வாகனங்களும் சேதமடைந்தன. இதனையடுத்து ஆம்பூர் கலவரம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் 25 லட்சம் மதிப்புடைய அரசு சொத்துக்கள் சேதமாகின. இந்த சம்பவம் தொடர்பாக 191 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையானது நடைபெற்று வந்தது. 

இதனையடுத்து இந்த வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் இன்று (28.08.2025) தீர்ப்பளித்துள்ளது. மாவட்ட நீதிபதி மீனா குமாரி வழங்கிய தீர்ப்பில், 'மொத்தம் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 6 வழக்குகளில் தொடர்புடையவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். 22 பேர் குற்றவாளிகள் ஆவர். மாற்ற அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர். கலவரத்திற்குக் காரணமான போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லாம் பாஷாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 22 பேருக்கும் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் விஜயகுமாருக்கு 10 லட்ச ரூபாயும், பெண் காவலர் ராஜலட்சுமிக்கு 10 லட்ச ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும். அதோடு 3 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அரசு சாட்சிகளுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் காவலர்களைத் தோளில் சுமந்து காப்பாற்றிய காவலர் ராஜாவுக்கு நீதிமன்றம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.