“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று இரவு வேலூர் புறநகர் மாவட்டத்துக்குட்பட்ட அணைக்கட்டு தொகுதியில், அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் மக்கள் மத்தியில் பேசினார்.

Advertisment

அணைக்கட்டில் பேச எடப்பாடி பழனிசாமியின் வாகனம் வந்து நின்றவுடன், அருகே இருந்த சிறிய தெருவில் இருந்து ஆம்புலன்ஸ் வந்ததால், “அதில் நோயாளியே இல்லை. என்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல் ஆளில்லாமல் ஆம்புலன்ஸைத் தொடர்ச்சியாக அனுப்பி, மக்களைச் சிரமத்துக்கு உள்ளாக்கும் வேலையை இந்தக் கேடுகெட்ட, கேவலமான அரசு செய்கிறது. இதனால் மக்களுக்கு ஏதாவது ஆனால், யார் பொறுப்பு? நானும் 30 கூட்டங்களில் பார்த்துவிட்டேன், இதேபோல் தான் செய்கிறார்கள். நேருக்கு நேர் எதிர்க்கத் தைரியம், தெம்பு, திராணி இல்லாதவர்கள் இப்படிக் கேவலமான செயலில் ஈடுபடுகிறார்கள்,” என்று கூறி, ஆம்புலன்ஸ் எண்ணையும் ஓட்டுநரின் பெயரையும் குறித்து வைத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறினார். மேலும், இதற்கு எச்சரிக்கை விடுப்பதாகவும், “அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளில்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டி வரும் ஓட்டுநரையே நோயாளியாக ஏற்றி அனுப்புவோம்,” என எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.

“விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் துப்பில்லாத அரசு இந்த அரசு. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தந்த அரசு அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் தான் அதிக அளவு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. நாட்டிலேயே அதிக உயர்கல்வி பயில்வோர் உள்ள மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கிய சாதனையைப் படைத்தது அதிமுக ஆட்சி.அணைக்கட்டில் இரண்டு புதிய அரசு கலைக்கல்லூரிகளை அமைத்தது அதிமுக. புதிய தாலுக்கா, அகரம் தடுப்பணை, அரியூர் ரயில்வே மேம்பாலம், நாகநதி ஆற்றில் பாலம் உள்ளிட்ட பல திட்டங்களை அணைக்கட்டுக்கு வழங்கியது அதிமுக,” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதனைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டு உண்மையா? என ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தரிடம் விசாரித்தபோது, “நோயாளி ஒருவரை அணைக்கட்டு மருத்துவமனையில் இருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென அழைப்பு வந்ததால், வழக்கமாகச் செல்லும் சாலையில் கூட்டம் இருக்கும் என்பதால் மாற்றுப் பாதையில் சென்றேன். அங்கேயும் கூட்டம் இருந்ததால், வழிவிடச் சொல்லிக் கேட்டபோது, கட்சியினர் எனது சட்டையைப் பிடித்து இழுத்து தாக்கினர். இதில் எனது அடையாள அட்டை அறுந்துவிட்டது. பின்னர், வாகனத்தையும் அடித்தனர்

Advertisment

எடப்பாடி பழனிசாமி எங்களைப் பார்த்து, ‘அடுத்த முறை காலி வண்டி வந்தால், ஓட்டுநரையே நோயாளியாக்குவோம்,’ எனச் சொன்னது மனவேதனையை ஏற்படுத்தியது. எங்கள் உயிரையும் பணயம் வைத்து இந்தப் பணியைச் செய்கிறோம். இதுபோன்று நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாது. இனி இதுபோல் நடக்கக் கூடாது. எங்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டும். இது எங்களுக்கான பணி மட்டுமல்ல, மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான பணி. நேற்று அணைக்கட்டு மருத்துவமனையில் இருந்து ஊசூர் வரை காவல்துறை பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் சென்றது. இரவு 10:15 மணிக்கு நோயாளியை அழைத்துச் செல்ல வேண்டிய நான், கூட்டம் முடிந்த பிறகு 11:15 மணிக்குத்தான் காவல்துறை பாதுகாப்புடன் செல்ல முடிந்தது. வேலூர் மருத்துவமனை சென்று சேர்ந்தபோது 11:40 மணியாகிவிட்டது. இனி இதுபோல் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.