Advertisment

பாதுகாப்பு கோரிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்; உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி.யின் அறிக்கை தாக்கல்!

madurai-high-court-our

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போது 108 ஆம்புலன்ஸ் அவ்வழியாகச் சென்றது. அப்போது 108 ஆம்புலன்ஸில் இருந்த ஓட்டுநர் தாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சியிலும் இது போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இத்தகைய சூழலில் தான் மதுரையில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராகப் பணிபுரியும் இருளாண்டி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “108 ஆம்புலன்ஸ் ஊழியர்களான ஓட்டுநர் மற்றும் அதில் பணி புரியும் மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். 

Advertisment

எடப்பாடி பழனிசாமி நடத்தும் பரப்புரைக் கூட்டத்தின்போது தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் 108 அவசர கால ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தாக்கப்படுவதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதோடு தமிழகம் முழுவதும் இது குறித்து என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் (டிஜிபி ) அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.09.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹாரூன் ரஷீத் என்பவர் ஆஜராகி வாதிடுகையில், “108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோட்டை சாமி ஆஜராகி டிஜிபி தரப்பில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் கோட்டை சாமி வாதிடுகையில், “இந்த அறிக்கையில் தான் பல்வேறு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டன. அதில் தமிழகம் முழுவதும் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கக்கூடிய பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தவிர்க்க முடியாத பட்சத்தில் அந்த இடங்களில் அனுமதி இருந்தால் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டிருக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் எளிதாகச் சென்று வருவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்திருக்க வேண்டும். 

பெரிய பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெறக்கூடிய இடங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது. அதற்குத் தகுந்தவாறு காவல் துறையினர் அங்கு பணியமர்த்த வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு இது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவித்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு வழிமுறைகளும், விதிகளும் வகுக்கப்பட்டுள்ளது. அதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும், ஆணையாளர்களுக்கும் உடனடியாக இதனைப் பின்பற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது”எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கு விசாரணை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு (15.09.2025 - திங்கள்கிழமை) ஒத்தி வைத்துள்ளனர். 

edappadi k palaniswami admk report dgp safety driver 108 ambulance Ambulance madurai high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe