தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணச்சநல்லூரில் எடப்பாடி பழனிசாமி இன்று (24.08.2025) பரப்புரை மேற்கொண்டார்.
அதன்படி மணச்சநல்லூரில் பரப்புரையை முடித்து கொண்டு துறையூருக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து கொண்டிருந்தார். இந்நிலையில் துறையூரில் பாலக்கரை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் பெருந்திரளாக கூடியிருந்தனர். அப்போது ஆத்தூர் சாலையில் விபத்தில் சிக்கிய நபரை மீட்பதற்காக 108 ஆம்புலன்ஸ் அவ்வழியாக சென்றது. அதே சமயம் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்யும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவது வாடிக்கையாகவும், தொடர்கதையாக உள்ளது என அதிமுக தொண்டர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
அதோடு 108 ஆம்புலன்ஸை சுற்றி சூழ்ந்துகொண்டு ஓட்டுநரைத் தாக்கியும், ஆம்புலன்ஸை கைகளால் தட்டியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதில் நிலைகுலைந்து போன ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செய்வதறியாது திகைத்து நின்றார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்டு அனுப்பி வைத்தனர். முன்னதாக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி கடந்த 18ஆம் தேதி (18.08.2025) இரவு உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கூட்டத்தினர் மத்தியில் ஆம்புலன்ஸ் ஒன்று நுழைய முயன்றது.
அதனை பார்த்த எடப்பாடி பழனிசாமி, `ஆம்புலன்ஸில் ஆள் இருக்காங்களா, இல்லையா? ஒவ்வொரு முறையும் இப்படித்தான் நடக்குது. நிறுத்திப் பாருங்கள். அடுத்த முறை வெறும் ஆம்புலன்ஸ் வண்டி வந்தால், அதனை யார் ஓட்டிக்கிட்டு வருகிறார்களோ, அவரே பேஷண்ட்டாக மாறி ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டிய நிலைமை ஏற்படும் விடும்” எனப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும், எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/24/ambulance-admk-2025-08-24-22-08-10.jpg)