அமேசான் நிறுவனம், ஆன்லைன் வர்த்தகத்தில் முக்கிய இடம் வகித்து வருகிறது. இந்நிறுவனம் பல நாடுகளில் தனது சேவையை வழங்கி வரும் பன்னாட்டு நிறுவனமாகும். இதன் தலைமையகம் அமெரிக்காவில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அமேசான் நிறுவனமும் கிட்டத்தட்ட 30,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 14,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது.

Advertisment

இந்த நிலையில் தற்போது அந்நிறுவனம் வருகின்ற ஜனவரி 27ம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக மீண்டும் ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், கிட்டத்தட்ட 14,000 லிருந்து 16000 பேர் வரை பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாயுள்ளது. இந்த பெரிய அளவிலான ஆட்குறைப்பு செய்திகள், ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து அமேசானில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் முக்கிய பொறுப்பிலுள்ள நிர்வாகிகள் என பலரும் தங்களது அச்சத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisment

ஏ.ஐ தொழில் நுட்பம் வளர்ச்சியடைத்ததை தொடர்ந்து, இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழக்கக்கூடும் என்று நிபுணர்கள் முன்னதாகவே கணித்திருந்தனர். இந்த கணிப்பின்படி, பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் ஏ.ஐ பயன்பாடு அதிகரித்தையடுத்து பெரும்பாலானோர் தங்களது வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. அந்த வகையில், அமேசான் நிறுவனமும் ஏ.ஐ தொழில் நுட்பத்தை அதிக அளவு பயன்படுத்த தொடங்கியதன் காரணமாக இந்த ஆட்குறைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, இந்நிறுவனம் கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக கிட்டத்தட்ட 27000 பேரை பணியிலிருந்து நீக்கியது. இந்நிலையில் இந்த ஆண்டில் மீண்டும் 16000 பேர் பணியிழக்கும் நிலை உருவாக இருப்பதாக வந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Advertisment