ரோபோடிக் கண்டுபிடிப்புகள் மற்றும் பயன்பாடுகளில் தீவிரம் காட்டி வரும் சைனா, ரோபோடிக்பீ (roboticBEE) என்ற கொசு அளவிலான ட்ரோன்களை உருவாகியுள்ளது.
சீனாவில் உள்ள இராணுவ ஆராய்ச்சி நிறுவனம், கொசுவின் அதே அளவு மற்றும் வடிவத்தைக் கொண்ட ஒரு உளவு ட்ரோனை வெளியிட்டுள்ளது. இந்த சிறிய ஆளில்லா கொசு அளவிலான ட்ரான் மெல்லிய கால்கள் மற்றும் இரண்டு இறக்கைகள் கொண்டது. பார்ப்பதற்கு உண்மையான கொசு போலவே உருவத்திலும் அளவிலும் உள்ளது. இவற்றை ஸ்மார்ட்போன் வழியாகவே கட்டுப்படுத்தலாமாம்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NUDT) ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த கொசு ட்ரோன்கள், அந்நாட்டின் இரகசிய ராணுவ நடவடிக்கைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் பேரிடர் கண்காணிப்பு போன்ற விஷயங்களுக்கு இது பயன்படுத்தப்படும் என்று இதன் பின்னணியில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் எதிர்கால பயன்பாட்டில் செயற்கை மகரந்தச் சேர்க்கைக்கும் இவை பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பூச்சிகளுடைய அற்புதமான பன்முகத்தன்மைக்குள் உயிரியல் உத்வேகத்தைத் தேடுவது ரோபோவை தொடர்ந்து மேம்படுத்த எண்ணற்ற வழிகளை வழங்குகிறது எனவும் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். சைனாவின் கொசு ட்ரோன் வருகையால் 'அப்போ இனி நான் ஈ பாணியில் தாக்குதல்கள் இருக்குமோ' என இப்போதே சிலாகித்து வருகின்றனர் ரோபோடிக் இணையவாசிகள்.