வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதை இன்றுவரை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள தங்களின் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுவினை விநியோகம் செய்து வருகின்றனர். அந்த வகையில், முதல் விருப்ப மனுவைப் பெற்றார் பிரேமலதா விஜயகாந்த். அடுத்ததாக விஜய பிரபாகரன் விருப்ப மனுவைப் பெற்றார். இந்த நிலையில், அக்கட்சி அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான விஜய பிரபாகரன் மற்றும் சுதீஷ் ஆகியோர் இருந்தனர். இந்த சந்திப்பில், தேமுதிக கூட்டணி குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் எனத் தெரிவித்தார்.
அதே நேரத்தில், திமுகவின் அமைச்சர் ஏ.வ. வேலு, அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இதுவரை தேமுதிகவுடன் எந்தவித கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என்று ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இதைச் சுட்டிக்காட்டிய, பிரேமலதா ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பினரும் இதனை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிலையில், பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசியதாவது, " அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பின் மூலமாக இந்த தேர்தலில் வெற்றி பெற்று, அந்த வெற்றியை விஜயகாந்த்திற்குச் சமர்ப்பணம் செய்வோம் என்று கட்சியின் சார்பாக உறுதிமொழி எடுத்துள்ளோம். இதுவரை நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இதை, திமுகவின் அமைச்சர் வேலு, பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். தேமுதிக இருதரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது உண்மையில்லை. எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார்களோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி அமைப்போம். எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை, எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்போம்" என்று தெரிவித்தார். மற்றொருபுறம் தேமுதிக சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு அளிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us