சென்னை பூந்தமல்லியில் நேற்று (11/07/2025) சென்னை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரையில், ''31 ஆண்டுகளாக உயிரைப் பணயம் வைத்து இந்த கட்சியைக் காப்பாற்றி வந்துள்ளேன். நம்மை குறிவைத்து தாக்குகிறார்கள். இந்த இயக்கத்திற்கு சோதனை வரும் போதெல்லாம் அதைத் தடுக்க என்ன வழி என்று யோசித்த பொழுது சில வேளைகளில் தவறான முடிவுகளும் நான் எடுத்தேன்.

நான் அதிமுகவுடன் உறவு வைக்க வேண்டும் என நினைத்தவன் அல்ல. ஆனால் கட்சியில் ஒரு எட்டு பேராவது சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயலலிதா அம்மையாரை சந்தித்தேன். நான் திருச்சி திமுக மாநாட்டிற்கு போகாமல் அதிமுகவின் ஜெயலலிதா உள்ள போயஸ்  தோட்டத்திற்கு சென்று உடன்பாடு வைத்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. திமுக கூட்டணியில் தான் நாம் எந்த சூழ்நிலையிலும் நீடிப்போம். அதன் வெற்றிக்கு பாடுபடுவோம். கைத் தட்டுங்கள். இது என் கட்டளை'' என்றார்.