வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணியை இறுதி செய்யும் பணியை திமுக தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் சில மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் கூட்டணி குழுவை அறிவித்திருந்தது. அதன்படி, இந்த குழு தான் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை நியமிக்காமல் இருந்த காரணத்தினால், இந்த குழு இதுவரை பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இருந்தது. இப்போது திமுக சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு நியமிக்கப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக கிரிஷ் சோடங்கர் திமுக எம்பி கனிமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த சோடங்கர், "இது ஒரு மரியாதையை நிமித்தமான சந்திப்பு தான். மாநிலங்களவை சீட் மற்றும் உள்ளாட்சிகள் குறித்துப் பேசினோம். சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி செய்யப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும். எத்தனை தொகுதிகள் என்பதை, எங்கள் குழு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு உறுதியான தகவல்கள் வெளியாகும்" என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, கனிமொழி டெல்லியில் ராகுல்காந்தியைச் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 40 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் அறிக்கையில் தேசிய அளவிலான அறிவிப்புகளைச் சேர்ப்பது போன்ற திட்டங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, கருத்து வேறுபாடுகளை மறந்து இரு கட்சிகளும் ஒன்றிணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க வேண்டுமெனக் கனிமொழி, ராகுலிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், திமுக காங்கிரஸ் இடையில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறித்த விவாதங்கள் கைவிடப்பட்டு, தற்போது கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Follow Us