தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை எனத் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் பேசக் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவைக் காங்கிரஸ் கட்சி அமைத்தது. இந்த குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர், சூரஜ் எம்.என். ஹெக்டே, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நிவேதித் ஆல்வா, மற்றும் தமிழகச் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செ. ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/03/congress-3m-team-2025-12-03-14-38-55.jpg)
இதனையடுத்து இந்த குழுவினர் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி முதற்கட்டமாக சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சிக்குப் பலமாக உள்ள சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணி தலைமையிடம் எவ்வளவு தொகுதிகளைக் கேட்பது, எந்தெந்த தொகுதிகளைக் கேட்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு ஒரு விருப்பப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஒருங்கிணைப்புக் குழு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை இன்று (03.12.2025) சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அதில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இந்த குழு மரியாதை நிமித்தமாகச் சந்தித்திருக்கிறது. அவர்கள் (திமுக) எப்போது குழு அமைக்கிறார்களோ, அதன் அமைத்த பிறகு பேச்சுவார்த்தை தொடங்கும். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. எல்லாருக்கும் தெரியும் நிறையச் சந்தேகங்கள் எல்லாம் இருந்தது. கிழக்கா, வடக்கா, மேற்கா, தெற்கா என்று. எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கின்றது. இது ஒரு மிகப்பெரிய முன்னுதாரணம் தொடர்பானது இன்றைய சந்திப்பு” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/03/mks-congress-team-2025-12-03-14-37-19.jpg)