தமிழகத்தில் அதிக வளர்ச்சி பெற்ற மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் விளங்குகின்றது. பிரசித்தி பெற்ற கோவில்களும், உலக அளவில் விற்பனையாகும் பட்டுச் சேலைகளும், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இங்கு உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கிட்டத்தட்ட 765 படுக்கை வசதிகள் உள்ள இந்த மருத்துவமனையில் இருதய சிகிச்சை மருத்துவர்கள், காது மூக்கு தொண்டை மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

Advertisment

இவ்வளவு பெரிய மருத்துவமனையில் காலை நேரப் பணிக்கு வெறும் 28 முதல் 31 செவிலியர்கள்தான் பணி புரிகின்றனர். அதிலும், திடீர் விடுமுறையில் சில ஸ்டாஃப் நர்ஸ்களும், அலுவலகப் பணிக்காக 3 செவிலியர்களும் சென்றுவிடுவதால், தோராயமாக 25 செவிலியர்கள் மட்டுமே முதல் ஷிஃப்டில் பணி புரிகின்றனர். இதிலேயே சில சீனியர் செவிலியர்கள் ஏனோதானோ எனப் பணி செய்வதாகவும் கூறப்படுகிறது.  மேலும், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறை என்று கூறி, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து கிட்டத்தட்ட 20 செவிலியர்களை டைவர்ஷனில் எடுத்துள்ளனர்.

Advertisment

1

8 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்று அரசு வெளியிட்ட அரசாணை காற்றில் பறக்கவிடப்பட்டு, 40 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்ற கணக்கில் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதால், நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை என்று  குற்றச்சாட்டு வலுவாக எழுந்து வருகிறது. மேலும், செவிலியர்கள் இல்லாததால், டிப்ளமோ படிக்கின்ற மாணவ, மாணவிகளை ட்ரிப்ஸ் ஏற்றவும், ஊசி போடவும், மாத்திரை மருந்துகள் வழங்கவும் பயன்படுத்துகின்றனர். அனுபவம் இல்லாத மாணவ, மாணவிகளால் சிகிச்சை அளிக்கும்போது, நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்ற மாத்திரை, மருந்து, ஊசிகளால் பல நேரங்களில் பிரச்சினை ஏற்படுவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், வேலூர் காட்பாடி பகுதியைச் சேர்ந்த சட்ட உரிமை நீதிப் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ச. கௌரி என்ற சமூக ஆர்வலர், காஞ்சிபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு  உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து 25 ஆம் தேதி காலை 9 மணி அளவில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு  சென்றுள்ளார்.

Advertisment

நெஞ்சு வலி என்பதால், எமர்ஜென்ஸி பிரிவுக்கு சென்றபோது, வாசலில் இருந்த ஒப்பந்த ஊழியர்கள் ஏன், எதற்கு எனப் பலவாறு கேள்விகளை கௌரியிடம் கேட்டுள்ளார். ஆனால், மயக்கமுற்ற நிலையில் இருந்த அவர் நேராக  உள்ளே சென்று, பணியில் இருந்த பெண் மருத்துவரிடம் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டிருக்கிறார். அப்போது, செவிலியர்கள் யாரும் பணியில் இல்லாததால், மாணவிகள் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவுன் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்துள்ளனர். மேலும், ஊசியும் போட்டுள்ளனர்.

ஊசி போடக்கூடிய இடத்தில் திரை மட்டுமே வைத்து மறைத்துள்ளதால், எளிதாக ஆண்களும் பெண்களும் பார்க்கின்ற வகையில் இருந்திருக்கிறது. இதனால், இடுப்பில் ஊசி போட்டுக்கொண்ட கௌரி மிகவும் சங்கடப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஊசி போடுகின்ற இடத்திற்கு மேலே கண்காணிப்பு கேமரா வைத்துள்ளதால், பெண்களின் அங்க அடையாளங்களைப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து, சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டுள்ளது.

இதைக் கண்ட கௌரி, ஆதாரம் தேவை என்பதால் அதனை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் ஆவேசப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள், கௌரியை எமர்ஜென்ஸி வார்டிலேயே வைத்து, கதவைப் பூட்டியுள்ளனர். சுமார் 15 நிமிடங்கள் வரையில் எமர்ஜென்ஸி வார்டிலேயே சிறைபிடிக்கப்பட்ட கௌரியை, காவல்துறையினர் வந்து மீட்டனர்.

மருத்துவமனையின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டு ஆவேசம் அடைந்த கௌரி, காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளர். மேலும், மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும், அப்போது பணியில் இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Untitled-1

இதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கௌரி, "ஓ.பி. சீட்டு வாங்கும்போதும், தெரிந்தவர்களுக்கு மட்டுமே உடனே கொடுக்கின்றனர். பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனக்கு நெஞ்சு அடைக்கிறது என்று கூறி எமர்ஜென்ஸி பிரிவுக்கு சென்றால், அங்கே உள்ள ஒப்பந்த ஊழியர்கள், ஏன்?  எதற்கு? என்ன? என்று தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு, என்னுடைய நோயை அதிகப்படுத்திவிட்டனர். மருத்துவரைச் சந்தித்தபோது, மாணவிகள்தான் ட்ரீட்மென்ட் செய்கின்றனர். மேலும், கண்காணிப்பு கேமரா வைத்துள்ள இடத்தில் வைத்துதான் பெண்களின் இடுப்பில் ஊசி போடப்படுகிறது. சுகாதாரம் சற்றும் இல்லை. இதைப் புகைப்படம் எடுக்கச் சென்றால், என்னைக் கைது செய்து, சிறையில் அடைத்தது போல் நடந்துகொண்டனர். மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுவிட்டது. என் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.