Allahabad High Court says Alimony cannot be denied to a wife just because the marriage is invalid
கணவன் தனது முந்தைய திருமணத்தையும் விவாகரத்தையும் மறைத்ததால் தனக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி ஒரு பெண் குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம், ‘இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 12ன்படி, முந்தைய திருமணத்தை மறைத்ததால் இந்த திருமணத்தை செல்லாததாக்கலாம். ஆனால் நியாயமான காரணமில்லாமல் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதால் அவருக்கு ஜீவனாம்சம் வழங்க உரிமை இல்லை. இருப்பினும், பெண்ணின் மைனர் மகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்க வேண்டும்’ என்று கூறி மனைவியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனைவி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ராஜீவ் லோச்சன் சுக்லா அமர்வு முன்பு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுக்லா, ‘குடும்ப நீதிமன்றத்தின் காரணம் ஆதாரமற்றது மட்டுமல்ல, சட்டத்திற்கு முரணானது. நியாயமான காரணமின்றி தனது கணவரிடம் இருந்து மனைவி பிரிந்து வாழ்கிறார் என்ற எந்த அனுமானத்தை நியாயப்படுத்த முடியாது. ஒரு திருமணம் ரத்து செய்யப்படலாம், செல்லாததாக அறிவிக்கப்படலாம் என்பதற்காக மனைவிக்கு பராமரிப்பு வழங்குவதை மறுக்க முடியாது.
செல்லாததாக்குதல் உத்தரவு வழங்கப்படும் வரை, செல்லாததாக்கக்கூடிய திருமணம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். எனவே, பராமரிப்பு உரிமை உட்பட அதிலிருந்து வரும் அனைத்து உரிமைகளும் அப்படியே இருக்கும். திருமணம் செல்லாததாகவே இருந்தாலும், இருதரப்பினரின் உண்மைகள் மற்றும் நடத்தையைப் பொறுத்து, வாழ்க்கைத் துணைவர் ஜீவனாம்சம் கோரலாம்’ என்று கூறி இந்த வழக்கை சந்தெளலியில் உள்ள குடும்ப நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பினார். மேலும், மகளுக்கு வழங்கப்பட்ட பராமரிப்புக்கு இடையூறு விளைவிக்காமல், அந்த பெண்ணின் பராமரிப்பு கோரிக்கையை மீண்டும் மறுபரிசீலனை செய்யுமாறும், 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.