தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அகில இந்திய மோட்டார் மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு தலைவர் முபாரக் சாஹிப் தலைமை வகித்தார், பொதுச் செயலாளர் கிருபாகரன் முன்னிலை வகித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் செய்தி தொடர்பாளர்
சௌந்தரபாண்டி, திருப்பூர் மாவட்டத் தலைவர் ராஜசேகர், முத்துப்பாண்டி, தென்காசி தேர்தல் பணி குழுத் தலைவர் திருமலைசாமி உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினார்கள்.

Advertisment

இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘2026ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய மோட்டார் மக்கள் கட்சி சார்பில் சங்கரன்கோவில் தொகுதியில் பாண்டி என்பவர் போட்டியிடுகிறார். மோட்டார் தொழில் செய்து வருபவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அன்றாடம் கஷ்டப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ஒரு விடிவு காலம் வருவதற்காக இந்த கட்சி ஜனநாயக வழியில் தேர்தலை சந்திப்போம் என முடிவு செய்து விட்டோம். அதற்காக இந்த அமைப்பை ஏற்படுத்தி ஒன்றுபட்டுள்ளோம்.

Advertisment

இதுவரை இந்த நாட்டினை மாறி மாறிஆண்டு கொண்டிருக்கின்ற நான்கு கட்சிகளுமே ஓட்டுனர்களுக்கு தேவையான விஷயங்களை முழுமையாக பூர்த்தி செய்து கொடுக்கவில்லை. அதற்கு நமக்கு நாமே அதனை பூர்த்தி செய்து கொள்வோம். தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைக்கின்றோம். இதுவரை 50 சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஓட்டுனர்கள் சார்பாக வேட்பாளர்கள் நிறுத்துவதாக முடிவு செய்துள்ளோம். நாங்கள் வெற்றி பெற்றால் காவல்துறையினருடைய வேலை 8 மணி நேரமாக குறைப்போம்’ இவ்வாறு நிர்வாகிகள் கூறினர். கூட்டத்தில்  மோட்டார் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.