சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் கோடம்பாக்கம் ஸ்ரீ (என்கிற) ஸ்ரீ கண்ணன் (வயது 54). இவர் அகில இந்திய இந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இத்தகைய சூழலில்தான் கோடம்பாக்கம் புலியூரைச் சேர்ந்த பெண் ஒருவர் இவரது வீட்டில் பணியாற்றி வந்தார். இதனையடுத்து இந்த பெண்ணுக்கும், கோடம்பாக்கம் ஸ்ரீக்கும் ரகசிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் அந்த பெண், பள்ளிச் சிறுமியான தனது சகோதரர் மகளையும் கோடம்பாக்கம் ஸ்ரீ வீட்டுக்கு அடிக்கடி அழைத்து சென்றுள்ளார்.
இதன் காரணமாக அந்த சிறுமி மீது கோடம்பாக்கம் ஸ்ரீக்கு விபரீத ஆசை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி, தனது அத்தையிடம் கூறியுள்ளார். இருப்பினும் அவரும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி காணாத்தூருக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள வீட்டில் சிறுமியை கோடம்பாக்கம் ஸ்ரீ பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதே போன்று, சிறுமியை 3 முறை, கோடம்பாக்கம் ஸ்ரீ பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் அத்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதனையடுத்து தனக்கு நேர்ந்த துயரச் சம்பவம் குறித்து வேலூரில் வசிக்கும் தனது தாயாரிடம் சிறுமி கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இது தொடர்பாக தியாகராயநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த கொடூர சம்பவத்திற்குக் காரணமான கொடம்பாக்கம் ஸ்ரீ, அதற்கு துணையாக இருந்த சிறுமியின் அத்தை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
முன்னதாக அகில இந்திய இந்து மகாசபை அமைப்பின் மகளிரணி பொறுப்பாளராக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2020ஆம் ஆண்டு கோடம்பாக்கம் ஸ்ரீ கீழ்ப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை மிரட்டி நிலத்தை அபகரித்த வழக்கில் 2021ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.