தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு கட்சிகளும், தங்களது கட்சிக்குள் குழு ஒன்றை அமைத்து தேர்தல் அறிக்கையையும், தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisment

இதனிடையே திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்குள், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமை தலைமையில் கடந்த 17ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்றும், கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் தேசிய தலைமை முடிவெடுக்கும் என்றும் காங்கிரஸ் தலைமை தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் கராராக கூறியதாகத் தகவல் வெளியானது.

Advertisment

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாவட்டத் தலைவர்களை காங்கிரஸ் தலைமை நியமித்து உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக அமைப்பு ரீதியாக மொத்தமுள்ள 77 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கான புதிய மாவட்டத் தலைவர்களை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய சென்னை கிழக்கு பகுதிக்கு கராத்தே செல்வம், மத்திய சென்னை மேற்கு பகுதிக்கு கோபி, வடசென்னை கிழக்கு பகுதிக்கு மதரம்மா கனி, தென் சென்னைக்கு மத்திய மாவட்டத் தலைவர் ஜோதி பொன்னம்பலம், தென் சென்னை கிழக்கு பகுதிக்கு விஜய சேகர், தென் சென்னை மேற்கு பகுதிக்கு திலகர் என்ற பலருக்கு புதிய மாவட்டத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் டில்லிபாபு தவிர்த்து மற்ற அனைவரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல், மதுரை, திருச்சி, கடலூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்டத் தலைவர்கள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்தாண்டு மாநிலத் தலைவர் செல்வபெருந்தகைக்கு எதிராக டெல்லி சென்று புகார் அளித்த மாவட்ட தலைவர்கள் பலர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

Advertisment