குஜராத் மாநில அமைச்சர்கள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில அமைச்சரவையில் 16 பேர் அமைச்சர்களாகப் பதவி வகித்து வந்தனர். இந்த நிலையில், இன்று (16-10-25) திடீரென்று அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். நாளை நடைபெறவிருக்கும் ஒரு பெரிய அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதால் குஜராத் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் சுனில் பன்சால் மற்றும் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். தற்போதைய அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகிக்கும் ஒரே உறுப்பினர் முதல்வர் பூபேந்திர படேல் தான். அவர், இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை சந்தித்து அமைச்சர்களின் ராஜினாமாக்களை முறையாக சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் அமைச்சரவை, 26 அமைச்சர்களாக விரிவுப்படுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், சுமார் ஏழு முதல் பத்து அமைச்சர்கள் வரை பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும், மீதமுள்ள பதவிகள் புதிய முகங்களால் நிரப்பப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிய குஜராத் அமைச்சரவையின் பதவியேற்பு விழா நாளை (17-10-25) காலை 11.30 மணிக்கு காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment