தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் ஏற்கனவே தொகுதி வாரியாக தேதிகளை திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''இந்தியா கூட்டணி என்ற ஒன்றை வைத்திருக்கிறார்கள். அந்த கூட்டணியில் உள்ள அனைவரும் ஒரே கொள்கையோடு இருக்கிறீர்களா? இந்தியாவில் இருக்கின்ற பல மாநிலங்களில் இருக்கின்ற கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து இந்தியா கூட்டணி என்ற கூட்டணி அமைத்திருக்கிறீர்கள். அவையெல்லாம் ஒத்த கருத்துடைய காட்சிகளா? பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு.
கேரளாவில் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் ஒரே கொள்கையில் இருக்கிறதா? மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியும் கம்யூனிஸ்டும் ஒரே கொள்கையில் கூட்டணியில் இருக்கிறார்களா? இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை அவதூறாக விமர்சித்தால் இதற்கு மேலும் எங்களின் கட்சி நிர்வாகிகள், ராஜேந்திர பாலாஜி போன்ற அற்புதமாகப் பேசக்கூடிய நபர்கள் உங்களுக்குப் பதில் கொடுப்பார்கள்.
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்; கூச்சம் இல்லாமல் முத்தரசன் பேட்டிக் கொடுக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் வைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி. கூட்டணி வைக்கலாம் தேர்தல் முடிந்த பிறகு அந்தந்த கட்சி அந்தந்த கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டால் பரவாயில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று ஒரு கொள்கை இருந்தது ஒரு காலத்தில். இன்றைய தினம் அதெல்லாம் காற்றோடு காற்றாகக் கரைந்து போய்விட்டது. முத்தரசன் அவர்களே எங்களைப் பற்றி விமர்சனம் செய்தால் உங்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு நிறைய இருக்கிறது'' என்றார்.