மாநிலங்களவை உறுப்பினர்களான என்.ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் (02.04.2026) முடிவடைய உள்ளது. எனவே இந்த காலி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து திமுக சார்பில் திருச்சி சிவா, ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுக சார்பில் எம். தம்பிதுரை, காங்கிரஸ் கட்சி சார்பில் எம். கிறிஸ்டோபர் திலக், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காலியாக உள்ளதாக அறிவிக்கபட்ட இடங்களுக்கு கூடுதலாக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யாததால், தேர்தல் நடத்தப்படாமல் போட்டியின்றி வெற்றி பெற்றதாக இன்று (09.03.2026) அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் திமுக சார்பில் 2 உறுப்பினர்களும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேமுதிக சார்பில் தலா ஒருவரும் என மொத்தம் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே போன்று அதிமுக கூட்டணியில் அதிமுக சார்பில் ஒருவரும், அதன் கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் ஒருவரும் என மொத்தம் 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து இதற்கான அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்பாளர்களிடம் வழங்கியுள்ளார்.
Follow Us