மகாராஷ்டிரா மாநிலம், மும்பை ரயில்களில் கடந்த 2006 ஜூலை 11ஆம் தேதி 11 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து திடீரென குண்டு வெடித்தன. அவை மாதுங்கா சாலை, மாஹிம் சந்திப்பு, பாந்த்ரா, கர் சாலை, ஜோகேஷ்வரி, பயந்தர் மற்றும் போரிவலி நிலையங்களுக்கு அருகில் வெடித்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 189 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழு ஒன்று பொறுப்பேற்றது. அதன்படி பயங்கரவாதிகளான பைசல் ஷேக், ஆசிப் கான், கமல் அன்சாரி, எஹ்தேஷாம் சித்துகி, நவீத் கான், முகமது சாஜித் அன்சாரி, முகமது அலி, டாக்டர் தன்வீர் அன்சாரி, மஜித் ஷாஃபி, முசம்மில் ஷேக், சோஹைல் ஷேக் மற்றும் ஜமீர் ஷேக் ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மும்பை விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து பைசல் ஷேக், ஆசிப் கான், கமல் அன்சாரி, எஹ்தேஷாம் சித்துகி மற்றும் நவீத் கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மற்ற ஏழு குற்றவாளிகளான முகமது சாஜித் அன்சாரி, முகமது அலி, டாக்டர் தன்வீர் அன்சாரி, மஜித் ஷாஃபி, முசம்மில் ஷேக், சோஹைல் ஷேக் மற்றும் ஜமீர் ஷேக் ஆகியோருக்கு சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனிடையே, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி 12 பேரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அவர்கள் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று மும்பை நீதிமன்ற நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் முன்பு வந்தது. அப்போது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது, ‘குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. வழக்கு விசாரணையின் போது மீட்கப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வரைபடங்கள் குண்டுவெடிப்புகளுடன் தொடர்பில்லாததாகத் தோன்றியது. குண்டுவெடிப்புகளில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பதை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டது. குண்டுவெடிப்பு நடந்து 100 நாட்களுக்குப் பிறகும், ஒரு சந்தேக நபரை ஒருவர் நினைவில் வைத்திருப்பது சாத்தியமில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்ததாக நம்புவது கடினம். எனவே, அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டு, தள்ளுபடி செய்யப்படுகிறது. வேறு எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேடப்படாவிட்டால் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்’ என்று கூறி அவர்களை விடுவித்து உத்தரவிட்டனர்.