தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் ஏற்கனவே தொகுதி வாரியாக தேதிகளை திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''இந்த தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி உள்ளதா? சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என சொன்னார்களே அமைத்தார்களா? கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும் என்றார்கள் அமைந்தார்களா? தென்காசியில் அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என்றார்கள் அமைத்தார்களா? புளியங்குடியில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான குளிர்பதன வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்கள் செய்தார்களா? கொப்பரை தேங்காவிற்கு மின்சார உலர் வசதி ஏற்படுத்தப்படும் என்று சொன்னார்கள் செய்தார்களா? தென்காசியில் சிறப்புப் பொருளாதார மன்றம் மண்டல அமைக்கப்படும் எனச் சொன்னார்கள் அமைந்தார்களா?
தென்காசியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சொன்னார்கள் அமைந்தார்களா? தென்காசியில் மாம்பழச்சாறு உற்பத்தி நிலையம் மற்றும் எலுமிச்சை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார்கள் அமைத்தார்களா? ராமநதி, ஜம்புநதி இணைப்பு திட்டம் முன்னெடுக்கப்படும் என்றார்கள் அதனை முன்னெடுத்தார்களா? கைவிட்டு விட்டார்கள். தென்காசியில் அரசு வனக்கல்லூரி அமைக்கப்படும் என்றார்கள் அமைத்தார்களா? இந்த பத்து வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. அப்பொழுது பத்துக்கு பூஜ்ஜியம் தானே. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இந்த மாவட்டத்தில் தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள். இதை நாங்கள் சொன்னால் எடப்பாடி பழனிசாமி பஸ்ஸில் போய் பொய்யா பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள். அதனால் தான் நாங்களே அச்சு அடித்து உங்களிடம் கொண்டு வந்து காட்டுகிறோம். உண்மைதானே இது. 24கொடுத்த வாக்குறுதி செய்யாத அரசு தொடர வேண்டுமா?'' என்றார்.