சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் நாளான ‘ரக்சா பந்தன் விழா’ நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் அதி விமர்சையாக கொண்டாடப்படும் இந்த நாளின் போது பெண்கள், தங்கள் சகோதர்களுக்கு அல்லது சகோதரர்களாக நினைக்கும் ஆண்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டி தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் ரக்சா பந்தன் விழா, வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நாளை கொண்டாடுவதற்காக பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட அனைத்து பெண்களும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களிலான ராக்கி கயிறுகளை வாங்க பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கையால் தயாரித்த ராக்கியை கட்டி வருகிறார். பாகிஸ்தான் கராச்சியில் கடந்த 1981ஆம் ஆண்டு பிறந்த கமர் மொஹ்சின் ஷேக் என்ற பெண், திருமணம் செய்து கொண்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். இவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னார்வலராக இருந்த காலத்தில் பிரதமர் மோடி, தன்னை எப்படி இருக்கிறாய் என்று ஒருமுறை கேட்டதாகவும் அன்றிலிருந்து 30 ஆண்டுகளாக சகோதர சகோதரியாக வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார்.
சகோதர பாசத்தை வெளிபடுத்தும் விதமாக கமர் மொஹ்சின் ஷேக், சந்தையில் இருந்து ராக்கி கயிறுகளை வாங்காமல் ஒவ்வொரு ஆண்டும் தனது வீட்டிலேயே ராக்கி கயிற்றை தயாரித்து பிரதமர் மோடியின் மணிக்கட்டில் கட்டி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளாக பிரதமர் மோடிக்கு ராக்கி கயிற்றை கட்டும் இவர், கடந்தாண்டு ரக்ஷா பந்தனுக்கு டெல்லிக்குச் செல்ல முடியாமல் போயுள்ளது. இந்த ஆண்டு, பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து வரும் அழைப்பிறாக கமர் மொஹ்சின் ஷேக் காத்து கொண்டிருக்கிறார்.
இது குறித்து கமர் மொஹ்சின் ஷேக் கூறியதாவது, ‘பிரதமர் மோடி என்னை எப்படி இருக்கிறாய்? என்று கேட்டதில் இருந்து சகோதர சகோதரியாக உறவில் இருக்கிறோம். அவர் என்னை சகோதரியாக ஏற்றுக்கொண்டார். அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் அவரது மணிக்கட்டில் ஒரு ராக்கியைக் கட்டுவேன். சந்தையில் இருந்து ராக்கிகளை வாங்குவதில்லை. ஒவ்வொரு வருடமும் வீட்டிலேயே அவற்றை கையால் தயாரித்து பிரதமர் மோடியின் மணிக்கட்டில் கட்டுவதற்கு ஒன்றை கவனமாகத் தேர்ந்தெடுப்பேன். விழாவிற்கு தயாராகும் போது அவர் நல்ல ஆரோக்கியத்திற்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன். குஜராத்தின் முதல்வராக அவர் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அந்த பிரார்த்தனை நிறைவேறியபோது அடுத்து என்ன ஆசிர்வாதம் வழங்குவாய்? என அவர் என்னிடம் கேட்டார். அதற்கு இந்தியாவின் பிரதமராக வருவீர்கள் என நம்புகிறேன் என பதிலளித்தேன். அவர் தற்போது மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் இருக்கிறார். கடந்தாண்டு ரக்சா பந்தனுக்காக டெல்லிக்குச் செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்து அவரை பார்க்கும் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த ஆண்டு, ஓம் மற்றும் விநாயகர் வடிவங்களுடன் இரண்டு ராக்கிகளை உருவாக்கியுள்ளேன். அவர் தொடர்ந்து நாட்டிற்கு சேவை செய்வார் என நம்புகிறேன். அவர் நான்காவது முறையாக பிரதமர் பதவியேற்பதை காண விரும்புகிறேன்’ எனக் கூறினார்.