Advertisment

அஜித்குமாரின் மரணம்; எஸ்.பி., டி.எஸ்.பி.க்களின் ஸ்பெஷல் டீம் கூண்டோடு கலைப்பு!

103

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றியவர் அஜித்குமார். தங்க நகை திருட்டு வழக்குத் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஸ்பெஷல் டீம் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு கேள்விகளை எழுப்பி, சில உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது.

Advertisment

“அஜித்தை ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தவில்லை? வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? ஏன் வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கிறீர்கள்? அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள் இருப்பதாக அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண கொலை வழக்கு போல் இல்லை. அஜித்குமார் கொடூரமாகக் கடுமையாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக இருக்கிறது. உடலின் ஒவ்வொரு பாகமும் விடாமல் அஜித்குமார் தாக்கப்பட்டிருக்கிறார். அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்திருக்கின்றன. அஜித்குமாரைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அவரது இறப்பு வரை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை” என்று சரமாரி கேள்விகளால் காவல்துறையையும் அரசுத் தரப்பையும் துளைத்தெடுத்தது. அத்துடன், “யார் உத்தரவின் பேரில் சிறப்பு படைப் புலனாய்வுக் குழு விசாரணை செய்தது என டி.ஜி.பி. பதிலளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரவோடு இரவாக தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான சிறப்பு படைகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளன. சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், ரவுடிகள், கூலிப்படையினர் ஆகியவற்றைக் கண்காணிப்பது, குற்றச் சம்பவங்களில் பல்வேறு கோணங்களில் சிறப்பு புலனாய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காண்பது, குற்றவாளிகளின் நெட்வொர்க்கை ஸ்கேன் செய்து வெளிமாநிலங்கள் வரை சென்று அவர்களைக் கைது செய்து அழைத்து வருவது, காவல்துறைக் காவலில் (கஸ்டடி) கொண்டுவரப்பட்ட நபர்களிடம் தீவிர புலன்விசாரணை நடத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்ட எஸ்.பி. தலைமையில் ஒரு ஸ்பெஷல் டீமும், அந்தந்த சப்-டிவிஷனில் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் ஒரு ஸ்பெஷல் டீமும் இயங்கி வந்தன.

அஜித்குமாரின் மரணம் தொடர்பாக காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நீதிபதிகள் முன்வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி.யின் ஸ்பெஷல் டீம், தூத்துக்குடி சிட்டி, தூத்துக்குடி ரூரல், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய சப்-டிவிஷன்களில் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் செயல்பட்டு வந்த ஸ்பெஷல் டீம்  நேற்றிரவு உடனடியாகக் கலைக்கப்பட்டன. அந்த ஸ்பெஷல் டீம்களில் பணியாற்றி வந்த 80-க்கும் மேற்பட்ட காவலர்கள், அவரவர் காவல் நிலையங்களுக்கு சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பிற பணிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

police sivagangai district Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe