சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் மீது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி (28.06.2025) நகை திருடியதாக நிகிதா என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையின் போது போலீசார் அவரை கடுமையாக தாக்கியதில் ஜூன் 29ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த வழக்கைத் சி.பி.ஐ. விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியியுள்ளனர். அதன்படி எஸ்.பி. ராஜ்பீர் மற்றும் டி.எஸ்.பி. மோகித்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அஜித் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு முதற்கட்டமாக ரூ.7.5 லட்சம் இழப்பீடாக வழங்கிய நிலையில் தற்போது கூடுதலாக ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை கூட்டுறவுதுறை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி, எம்எல்ஏ தமிழரசி ஆகியோர் அஜித்குமார் தாயார் மாலதியிடம் வழங்கினார்.