சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் மீது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி (28.06.2025) நகை திருடியதாக நிகிதா என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையின் போது போலீசார் அவரை தாக்கியதில் ஜூன் 29ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
இதற்கிடையே இந்த வழக்கைத் தமிழக அரசு சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும் அறிவித்திருந்தது. அதோடு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருந்தனர். மற்றொருபுறம் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தரால் இது தொடர்பாக நடத்திய விசாரணையின் அறிக்கையும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/16/a4412-2025-07-16-09-13-48.jpg)
நேற்றைய தினம் இந்த சம்பவத்தில் உயிரிழந்த அஜித்குமார் காவல் வேனில் இருந்த நிலையில் அவருடைய சகோதரர் நவீன் குமாரை போலீசார் அழைத்துச் செல்லும் புதிய சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது மற்றொரு வீடியோ காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்புவனம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரிடம் அரசியல் கட்சியினர் மற்றும் போலீசார் கட்டப்பஞ்சாயத்து நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் வீடியோ காட்சி என ஒரு காட்சி வைரலாகி வருகிறது. அதில் திருமண மண்டபத்தின் உள் அரங்கில் ஒன்றுகூடி பேசிக் கொண்டிருக்கும் நிலையில் வெளியே உள்ள ஊர் மக்கள் கதவைத் திறங்கள் என கதவை தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கில் வாதாடிய ஹென்றி திபேன் திமுகவினர் மற்றும் போலீசாரால் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டதாகவும், அஜித்குமாரின் உடலை வாங்கிக்கொள்ள 50 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த வீடியோவிற்கு விளக்கம் அளித்துள்ள அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், 'உடலை வாங்க வேண்டும் என்பது நாங்கள் எடுத்த முடிவு தானே தவிர யாரும் எங்களை கட்டாயப்படுத்தவில்லை' என தெரிவித்துள்ளார்.